Published : 03 Jan 2016 01:22 PM
Last Updated : 03 Jan 2016 01:22 PM

ஆண்டுதோறும் வீணாகும் நீர்: நிதிக்காக காத்திருக்கும் செண்பகத்தோப்பு அணை - பராமரிப்பு இல்லாததால் விவசாயிகள் வேதனை

செண்பகத்தோப்பு அணை பராமரிப் புக்கான நிதியை அரசு வழங்கினால் ஆண்டுதோறும் வீணாகும் நீரை தேக்கி வைக்க முடியும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கிழக்கு மலைத் தொடரில் உற்பத்தியாகும் கமண்டல ஆறு, செண்பகத்தோப்பு கிராமம் வழியாகச் செல்கிறது. பின்னர், வேலூர் மாவட்டம் அமிர்தி, சிங்கிரிகோயில் வழியாகச் செல்லும் கமண்டல நதி, சம்புவராயநல்லூர் அருகே நாகநதி யுடன் கலந்து கமண்டல நாகநதியாக ஆரணி வழியாக ஓடி செய்யாற்றில் கலக்கிறது.

இதில், செண்பகத்தோப்பு நீர்ப் பிடிப்புப் பகுதியில் அணை கட்ட கடந்த 1996-ம் ஆண்டு ரூ.24 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர், மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.34 கோடி மதிப்பில் செண்பகத்தோப்பு அணை கடந்த 2007-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

செண்பகத்தோப்பு அணை 62.32 அடி உயரம் கொண்டது. இந்த அணையால் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 48 ஏரிகள் பயன்பெறும். அதேநேரம், திறப்பு விழாவுக்கு முன்பாகவே அணையின் கட்டுமானத்தில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்திய தாகவும் அணையின் ஷட்டர்கள் பாது காப்பானது இல்லை என்றும் புகார் கூறப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை

இதையடுத்து, அணை கட்டுமானப் பணியில் நடந்த முறைகேடுகள் குறித்த புகார் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது, இந்த வழக்கு விசாரணை தி.மலை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அணையின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அச்சத்தால் ஷட்டர்களை அடைத்து நீரை தேக்கி வைக்க முடியவில்லை. அணையில் தற்போது 48.15 அடி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. மழைக் காலங்களில் உபரி நீரை வீணாக ஆற்றில் திறந்து விடுகின்றனர். மேலும், பராமரிப்பு இல்லாததால் அணையின் நீர்த்தேக்கம் முழுவதும் கருவேல மரங்களால் நிரம்பியுள்ளது. இவற்றை முதலில் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரூ.9 கோடியில் பராமரிப்பு

கடந்த 2011-ம் ஆண்டு அணை மற்றும் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.2 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அளித்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் கிடைத்த அதிகப்படியான நீரை அணையில் தேக்கி வைக்க முடியாமல் திறந்து விடப்பட்டது.

எனவே, அணையின் பராமரிப்புப் பணியை உடனடியாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத் தனர். இதையடுத்து, ரூ.9 கோடியில் திட்ட மதிப்பீட்டு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளதாக தி.மலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த பரிந்துரையை அரசு உடனடியாக ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை யாக உள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘செண்பகத் தோப்பு அணையின் நிலை குறித்து மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தான் பொதுப்பணித் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏற்கெனவே, திட்ட மதிப்பீடு உயர்த்திய நிலையில்தான் அணை கட்டப்பட்டது. அதிலும் முறைகேடு புகார், சிபிசிஐடி வழக்கு காரணத்தால், அணை பராமரிப்புக்காக நிதி ஒதுக்க தயங்குகின்றனர். அணை யின் தற்போதைய நிலை குறித்து பொதுப்பணித் துறை அமைச்சரின் கவனத்துக்குச் சென்றால்தான் நிதி கிடைக்கும். இல்லாவிட்டால் அணையின் நிலை இப்படியேத்தான் இருக்கும். ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தால்தான் நிதி கிடைக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x