Published : 24 May 2017 12:09 PM
Last Updated : 24 May 2017 12:09 PM
சென்னைக்கு அடுத்து தென் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல் நோயாளிகளுக்கு செயற்கை பல் பொருத்துவதற்காகவும், பற்களில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்வதற்காகவும் உயர் சிகிச்சைகள் அளிப்பதற்கான செராமிக் லேப் (பல் ஆய்வகம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் நாளை (மே 25) திறக்கப்படுகிறது.
பற்கள்தான் ஒருவரின் அன்றாட வாழ்வுக்கு அச்சாணியாக இருக் கிறது. அந்த பற்கள் சேதமடைந்து அகற்றினால் முக அழகே கெட்டுப் போகிறது. தொடர்ந்து அவர் சாப்பிடுவதிலும் சிக்கல் ஏற்ப டுகிறது. இதற்கு பல் பராமரிப்பும், அதற்கான சிகிச்சை விழிப்புணர்வும் பொதுமக்களிடம் இல்லாததே முக் கியக் காரணம்.
மருத்துவச் சிகிச்சையில், பல் சிகிச்சை அதிக செலவை ஏற்படுத்தும். குறிப்பிட்ட ஒரே ஒரு பல் இடைவெளியை அடைப்பது, அழிந்துவிட்ட அல்லது அழிந்துகொண்டிருக்கும் திசு அல்லது பாக்டீரியாவை பல்லுக்குள்ளிருந்து நீக்குவதற்கான பல் வேர் சிகிச்சை (ரூட் கெனால் டிரீட்மென்ட்) மற்றும் செயற்கை பல் பொருத்துவதற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. பல பற்கள் சேதமடைந்தால் நடுத்தர, ஏழை மக்களால் முழுமையான பல் சிகிச்சை பெற முடியாமல் அப்படியே பற்களை விட்டுவிடுகின்றனர்.
இதில் வேர் சிகிச்சை, செயற்கை பல் பொருத்தவும் உயர் சிகிச்சைகள், அரசு மருத்துவமனைகளில் இல்லை. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 150 பல் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு பல் இடைவெளியை நிரப்பு பொருளால் நிரப்புவது, பல் எடுப்பது, முகத்தாடை சீர் அமைப்பு போன்ற அடிப்படை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
கடந்த ஒரு ஆண்டாக வேர் சிகிச்சையும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. செயற்கை பல், பற்கள் குறைபாடுகளை சரி செய் வதற்கான உயர் சிகிச்சைகள் அளிப்பதற்கு செராமிக் லேப் (பல் ஆய்வகமும், அதற்கான தொழில்நுட்ப ஆய்வாளர்களும் தேவைப்படுகின்றனர்.
தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகளை தாண்டி சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே இந்த ஆய்வகம் இருக்கிறது. மதுரை உள்பட தமிழகத்தின் பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளில், இந்த ஆய்வகம் இல்லாததால், செயற்கைப் பல் போன்ற உயர் சிகிச்சைகளுக்கு, பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை சார்ந்து இருக்க வேண்டிய உள்ளது. பல் சிகிச்சை அழகுபடுத்தும் சிகிச்சைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, இன்சூரன்ஸ் மருத்துவத் திட்டத்திலும் பல் சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. அதனால், தென் தமிழகத்தைச் சேர்ந்த நடுத்தர, ஏழை நோயாளிகளுக்கு உயர் பல் மருத்துவச் சிகிச்சை எட்டாக்கனியாகவே இருந்தது.
இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது செராமிக் லேப், அதற்கான தொழில்நுட்ப பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் நாளை திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது:
அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை செயற்கை பல் பொரு த்துவதற்கான சிகிச்சை மட்டுமே இல்லாமல் இருந்தது. தற்போது அந்த சிகிச்சையும் வரவுள்ளதால் தென் தமிழக மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த உயர் பல் சிகிச்சைகள் இனி எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும். பல் பாதிப்புகளில் முதன்மையானது பல் சொத்தை. அடுத்து பற்கள் உடைந்து இடைவெளி அதிகரித்து உணவுப் பொருட்கள் அதில் போய் சிக்கிக் கொள்வது.
பற்களை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டுவிடுவது. பற் களில் ஒட்டக்கூடிய இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதால் பற் சொத்தை ஏற்படுகிறது. இவை ஏற்படாமல் இருக்க மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுட்டிக்காட்டிய ‘தி இந்து’
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் வேர் சிகிச்சை, செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆனந்தராஜ் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் செயற்கை பல் உள்ளிட்ட பற்களில் இருக்கும் குறைபாடுகளை நீக்குவதற்கான செராமிக் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே, தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT