Published : 22 Jan 2014 08:24 PM
Last Updated : 22 Jan 2014 08:24 PM
உதகை அருகே 3 நபர்கள் மற்றும் இரு பசுக்களைக் கொன்ற கொடூரப் புலியை அதிரடிப்படையினர் புதன்கிழமை இரவு சுட்டுக் கொன்றனர்.
இந்த புலியை பிடிக்க 6 கூண்டுகள் அமைக்கப்பட்டன. கும்கி யானைகள் மோப்ப நாய்கள், அதிரடி படைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆனால், புலி பிடிபடவில்லை. வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த புலி, தொடர்ந்து பதுங்கி வந்தது. இதனால், புலியை பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 62 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டன. அதிநவீன தெர்மல் இமெஜிங் சென்சார் கேமிராக்கள், இயர்லி வார்னிங்க் டிடெக்டிங் இயந்திரம் பொருத்தப்பட்டு புலி நடமாட்டம் கண்காணிக்கப் பட்டது.
கடந்த 15 நாள்களாக போக்கு காட்டி வந்த புலி, குந்தகட்டை என்ற கிராமத்தின் அருகே உள்ள கப்பச்சி என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அப்பகுதியில் செவணன் என்பவரின் பசுமாட்டை தாக்கிக் கொன்றது. இதனால், கடந்த 2 நாள்களாக கப்பச்சி கிராமத்தை முற்றுகையிட்ட வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தொடர்ந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை காலை கப்பச்சி கிராமத்தின் அருகே உள்ள சாலையில் புலியின் உறுமல் கேட்ட கிராமத்தினர், தாங்களாகவே புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் புகுந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணியளவில் அந்த கிராமத்தின் தேயிலை எஸ்டேட் பகுதியில் மீண்டும் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்ற புலியைக் கண்ட மக்கள், அதிரடிப்படையினர் தொடர்ந்து சென்றனர்.
அப்போது, புதருக்குள் புகுந்த புலியை சுற்றி வளைத்து அதிரடிப் படையினர் சுடத் தொடங்கினர். சுமார் இரவு 8 மணி அளவில் புலி சுட்டுக் கொல்லப்பட்டது.
புலியின் உடலை கைப்பற்றிய அதிரடிப்படையினர் மாவட்ட ஆட்சியர் டி.சங்கருக்கு தகவல் அளித்தனர். நீலகிரி வடக்கு வனக்கோட்ட அலுவலகத்திற்கு புலியின் உடலை எடுத்துச் சென்றனர்.
கடந்த 20 நாள்களாக உதகையில் பீதியை ஏற்படுத்திய புலி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அப்பச்சி, சுற்றுவட்டார மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு கொல்லப்பட்ட புலியை பார்க்க வந்தனர்.
கொல்லப்பட்டது பெண் புலி. சுமார் 8 அடி நீளம். 8 முதல் 10 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
புலியின் நடமாட்டம் காரணமாக தொட்டப்பெட்டா, காப்புக்காடு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
புலி கொல்லப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை முதல் பள்ளி செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT