Published : 23 Sep 2016 06:09 PM
Last Updated : 23 Sep 2016 06:09 PM

இந்து முன்னணி பிரமுகர் கொலை: கோவையில் பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

கோவையில் இந்து முன்னணி இயக்கத்தின் மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஜி.சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதன் பின்னணியில் பதற்றம் சூழ்ந்துள்ளது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 6 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு கூறியது:

கோவை இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிக்குமார் (வயது 36). கோவை ரத்தினபுரியை சேர்ந்த இவர், கோவை ஜிஎன் மில்ஸ் அருகில் சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்த யமுனாவை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது சுப்பிரமணியபுரத்திலேயே வசித்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணிக்கு கோவை ராம்நகரில் உள்ள இந்துத்வா நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் இவர் வீட்டிற்கு சுமார் அரை கி.மீ. தொலைவுள்ள நிலையில் வெட்டிச் சாய்த்துள்ளனர். துடிதுடித்துக் கிடந்த அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க, வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதை அறிவித்து மருத்துவர்கள் அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. அதிகாலை முதலே கோவை ரயில்வே ஸ்டேஷன், கலைக்கல்லூரி சாலை, டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, கோவைபுதூர், மேட்டுப்பாளையம் சாலை, ரத்தினபுரி,காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. காலையிலேயே 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கற்கள் வீசி உடைக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் ஓடவில்லை.

சசிக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துத்வா அமைப்பினர் திரண்டனர். நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

காலை 6 மணி முதல் மதியம் 11.45 மணிவரை கோவை அரசு மருத்துவமனை கலவரக்காடு போல் காட்சியளித்தது. இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மற்றும் மாநில நிர்வாகி முகாம்பிகை மணி ஆகியோர் குறிப்பிடும்போது, 'போலீஸ் அஜாக்கிரதையினாலேயே எங்கள் உண்மைத்தொண்டர் ஒருவரை பறிகொடுத்துள்ளோம். அவருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் வந்தது. அதை உத்தேசித்து போலீஸ் பாதுகாப்பும் (பிஎஸ்ஓ) போடப்பட்டிருந்தது. அதை சமீபத்தில்தான் போலீஸார் விலக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்தே இந்த கொலை நடந்துள்ளது!' என்று தெரிவித்தனர்.

மருத்துவமனையில் குவிந்திருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும் போலீஸ் அதிகாரிகளிடம் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காணமுடிந்தது. கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவரே நேரடியாக கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டார். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

சசிக்குமாரின் மனைவி யமுனா கதறியழுததுடன், அவரின் குடும்பத்தினர் மூலைக்கு மூலை சோகத்துடன் பேச முடியாத சூழ்நிலையில் இருந்தனர். 'திருமணமாகி 8 வருடம் ஆகிய நிலையில் இதுவரை குழந்தையில்லை. இப்போதுதான் 3 மாதமாக கருவுற்றிருக்கிறார். அவருக்கா இந்த நிலை?' என்று அவர்களில் பலரும் உருக்கமாய் பேசியதைக் காணமுடிந்தது.

காலை 11 மணிக்கு சவக்கிடங்கிலிருந்து ஆம்புலன்ஸிற்கு ஏற்றப்பட்ட சசிக்குமார் உடலை அங்கிருந்து 50 மீ. தொலைவில் மருத்துவமனை வளாகத்திலேயே பிறிதொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கார ரதத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்து மாற்றினர். அங்கே எழுப்பப்பட்ட கோஷங்கள் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தின. ரதத்தில் ஏற்றப்பட்ட உடல் தொடர்ந்து ஊர்வலமாக ரயில்நிலையம் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

அதற்குள் இங்கே ஒரு சமூகத்தை சேர்ந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தவிர இங்கிருந்து 200 மீ. தொலைவே உள்ள கோட்டைமேடு பகுதியில் எதிர், எதிர் அணியினர் சுமார் 400 பேர் திரண்டு நின்றதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதை லேசான தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். அதைத் தொடர்ந்து கோட்டை மேட்டுக்கு செல்லும் வின்சென்ட் சாலை பகுதி, உக்கடம் பகுதி சாலைகள் சீல் செய்யப்பட்டன.

அதையடுத்து சசிக்குமாரின் சடல ஊர்வலம் கலைக்கல்லூரி சாலை, உப்பிலிபாளையம் ஜங்ஷன், நஞ்சப்பா ரோடு, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சிவானந்தா காலனி, ரத்தினபுரி, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் வழியாக 2 மணி நேரத்திற்கும் மேல் நகர்ந்தது. போகும்வழியில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸ் ஜீப்புகள் உள்பட பல்வேறு வாகனங்கள் உடைக்கப்பட்டன. ஊர்வலத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக உளவுப்பிரிவு போலீஸாரே தெரிவித்தனர்.

எங்களை எச்சரித்தார் அண்ணன்: சசிக்குமாரின் தம்பி கண்ணீர்

கொலையான சசிக்குமார் தம்பியும், கோவை மாவட்ட பாஜக இளைஞர் அணி மாவட்டத் தலைவருமான சுதாகர் 'தி இந்து'விடம் பேசினார். அவர் கூறுகையில், 'எங்க அண்ணன் சசிக்குமாருடன் சேர்த்து அண்ணன் தம்பிகள் நாங்க 4 பேர். ஒரு அக்கா. எல்லோருமே இயக்கத்தில் இருக்கிறோம். அவருக்கு கேரள பிடிஎப் கட்சியினுடைய லெட்டர் பேடில் (மதானியின் கட்சி) சில ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டல் கடிதம் வந்தது. அதில் இவர் பெயருடன் சேர்த்து இயக்கத்தை சேர்ந்த இன்னும் 3 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டு பத்வா போடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதையடுத்து அண்ணணுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சதூர்த்தி முன்பு வரை அவருக்கு ஒரு போலீஸ் துணையாகவே இருந்தார். அதை ஒரு வாரம் முன்புதான் விலக்கினாங்க. ஒரு வாரமாகவே எங்க அண்ணன் எங்களையெல்லாம் எச்சரிச்சுட்டே இருந்தார். பார்த்து கவனமாக இருங்க. யாராவது வந்து கதவை தட்டினா சட்டுனு கதவைத் திறந்துடாதீங்க. தனியா போகாதீங்க. யாரோ நம்மை பின்தொடர்ந்துட்டு இருக்காங்க!'ன்னு எச்சரிச்சுட்டே இருந்தார். இப்ப இவரே இப்படி அகப்பட்டு போயிட்டார்!' என சொல்லி விம்மினார்.

எதிரிகள் மையப்புள்ளியில் இணைந்து பலம் காட்டுகிறார்கள்: இமக நிர்வாகி கருத்து

இந்து மக்கள் கட்சி செய்தித்தொடர்பாளர் செந்தில்குமார் கூறுகையில், 'சசிக்குமார் யாரிடமும் அதிர்ந்து பேசாதவர். வம்பு தும்புக்கும் எந்த பஞ்சாயத்துக்கும் போகாதவர். இந்து முன்னணி என்றில்லாமல், இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட மற்ற இந்து இயக்கங்களுடனும் நெருக்கமாக இருப்பார். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் சொல்லுவார். மீடியாக்களுக்கு தானே முன்னின்று செய்திகள் கொடுப்பார். அத்தனை பேரையும் அரவணைத்து போன ஒரே காரணத்தால்தான் அவர் இப்படி கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

இவரை கொன்றவர்கள் ஒரு மையப்புள்ளியில் இணைந்து நன்றாகவே ஒருங்கிணைந்துள்ளார்கள் என தெரிகிறது. ஓசூரில் சூரி, திண்டுக்கல்லில் சங்கர் கணேஷ், அதையடுத்து இங்கே சசிக்குமார் என வரும் கொலைகள் அதையே உணர்த்துகிறது. இதில் காவல்துறை மிகவும் மந்த நிலையில் இருப்பது ஆபத்தானது!' என தெரிவித்தார்.

முதுகில் பிளந்த வெட்டுகள்: உளவுப் போலீஸ் தகவல்

கொலையாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். மற்றபடி உயர் போலீஸ் அதிகாரிகள் யாரும் இக்கொலைக்கான காரணம் குறித்த தகவலை வெளிப்படுத்தவில்லை. உளவுப்பிரிவு போலீஸாரிடம் பேசியபோது சசிக்குமாரை கொன்றது 4 பேர் கொண்ட கும்பல். சசி மொபட்டில் அன்றாடம் வருவதை கண்காணித்தே கொலையை நடத்தியிருக்கிறது என்பதையும் தெரிவித்தனர்.

இருப்பினும் சசிக்குமாரின் செல்போன் அழைப்பு மற்றும் வாட்ஸ் அப் போன்ற விஷயங்களையும் சேகரித்து வேறு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்ட அவர்கள், 'சசிக்குமாரின் உடலில் முதுகு, கழுத்து,கை என பல பகுதிகளில் 11 வெட்டுக்கள் விழுந்துள்ளதாகவும், அதில் 2 வெட்டுகள் முதுகில் நன்றாகவே பிளந்துள்ளது!' என்பதையும் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x