Published : 27 Oct 2013 03:38 PM
Last Updated : 27 Oct 2013 03:38 PM
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்த இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாகவே அவருக்கு டெல்லியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இங்கு டிசம்பர் 4-ல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது. இதை, அதிகாரபூர்வமாக விஜயகாந்த் இன்னும் உறுதி செய்யவில்லை.
சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லி வந்திறங்கிய விஜயகாந்த், டெல்லிவாழ் தமிழர்கள், அங்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட வேண்டும் என விரும்புவதாகவும். இது பற்றி முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாகவும் செய்தி தொலைக்காட்சி சேனல்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் தே.மு.தி.க. போட்டியிடுவதற்கு இப்போதே எதிர்ப்புகள் கிளம்பி விட்டன. இது குறித்து டெல்லிவாழ் தமிழர்களின் அமைப்புகளில் ஒன்றான தென்னிந்தியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'விஜயகாந்தின் கட்சி இங்கு போட்டியிட்டால், டெல்லியில் வாழும் தமிழர்கள் இடையே ஒற்றுமை குலைந்துவிடும். இங்கு பெரும்பான்மையாக வாழும் இந்தி பேசும் மக்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கு என தனி மரியாதை உள்ளது. தே.மு.தி.க. தேர்தலில் போட்டியிட்டால், 200 முதல் 300 வாக்குகளை மட்டுமே பெறுவார்கள். இது இந்தி பேசும் மக்களிடையே நமக்குள்ள மரியாதையை குறைத்துவிடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த ஐந்து தலைமுறைகளாக டெல்லியில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை டெல்லி அரசு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்காமலும், அதற்கான அங்கீகாரத்தை அளிக்காமலும் உள்ளது. இதை எதிர்த்து தென்னிந்தியர் முன்னேற்றக் கழகத்தினர் நடத்திய போராட்டத்தில் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இது பற்றி தென்னிந்தியர் முன்னேற்றக் கழகத்தின் இணைச்செயலாளர் ஹரி கிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், "எங்களின் போராட்டத்தின் பயனாக, அடுத்து எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் ஜாதி பட்டியலில் இணைப்பதற்கான அங்கீகாரம் கிடைத்துவிடும். அதை தமிழரான விஜயகாந்த் கெடுக்காமல் இருக்க வேண்டும். இதை எடுத்துக் கூறுவதற்காக விஜயகாந்தை நேரில் பார்க்க முயன்ற போது அவர் மறுத்து விட்டார்" என்றார்.
இதனால், விஜயகாந்த டெல்லிவாழ் தமிழர்களின் ஜாதிச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கூட்டம் நடத்தினால், அவரை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டப்போவதாகவும் ஹரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது பற்றி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் கருத்தை அறிய இயலவில்லை. அவரது சார்பில் டெல்லி மாநில தே.மு.தி.க. தலைவர் வி.என்.தட்சிணாமூர்த்தி 'தி இந்து' நாளிதழ் செய்தியாளரிடம் பேசினார்.
அவர் நம்மிடம் கூறுகையில், "எந்த ஒரு அமைப்பும் புதிதாக ஒன்றைச் செய்யும் போது எதிர்ப்புகள் வருவது வழக்கமானதுதான். இங்குள்ள தமிழர்களின் பிரச்சினை குறித்து சென்னை சென்று தலைவர் விஜயகாந்திடம் விளக்கினேன். அதைத் தொடர்ந்து அவர் டெல்லி வந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது" என்றார் தட்சிணாமூர்த்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT