Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM
அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால் சாலையைக் கடக்க முடியாமல் பாதசாரிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் நடந்துவரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக சாலைப் போக்குவரத்தில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் தாறுமாறான வேகத்தில் செல்கின்றன. பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக எல்.ஐ.சி. மற்றும் தாராப்பூர் டவர் அருகே சாலையைக் கடப்பது பெரும்பாடாக இருக்கிறது.
மயிலாப்பூர், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூ, டி.வி.எஸ். இடையேயுள்ள ஸ்மித் சாலை வழியாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் அண்ணா சாலையை அடைகின்றன. அதே நேரத்தில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து பிராட்வே, சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் இந்த இடத்தில் சந்தித்துக் கொள்கின்றன. அங்கு ஒரு சிக்னல் இருந்தாலும்கூட போக்குவரத்துக் காவலர்கள் பெரும்பாலான நேரங்களில் இருப்பதில்லை. இதனால் சிக்னலை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்கின்றனர். ராயப்பேட்டை பகுதிக்குச் செல்பவர்கள் வலது புறத்திலும், எழும்பூர் நோக்கிச் செல்பவர்கள் இடதுபுறத்திலும் திரும்ப முயல்வதால் ஸ்பென்சர் கட்டிடம் எதிரில் பல நேரங்களில் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எல்.ஐ.சி. நிறுத்தத்தில் நிறுத்த வேண்டிய பல மாநகர பஸ்கள், பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் அருகே நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. அது பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான இடமாகும். வேகமாக வரும் வாகனங்களை நிறுத்தி, பாதசாரிகள் சாலையைக் கடக்க உரிய ஏற்பாடுகள் எதுவும் இல்லை. ஒரு சில நேரங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணியாளர்கள் சிவப்பு நிற கொடியை அசைத்து வாகனங்களை நிறுத்திவிட்டு, பாதசாரிகள் சாலையைக் கடக்க உதவி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் வாகனங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லாததால் பாதசாரி
கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
தாராப்பூர் டவர் எதிரிலும் இதே நிலைமைதான். புஹாரி ஓட்டல் அருகே பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்பதைக் குறிக்க வெள்ளை நிற கோடு போடப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு போக்குவரத்து காவலர் யாரும் இல்லாததால் பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பிளாக்கர்ஸ் சாலை – அண்ணா சாலை சந்திப்பிலும் சாலையைக் கடப்பது பெரிய சவாலாகவே உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கான பொறுப்பில் உள்ள காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டபோது, “இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாக கவனிக்கப்படும். பாதசாரிகள் சிரமமின்றி சாலையைக் கடக்க தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்கிறோம்” என்றார்.
அவர் உறுதியளித்தபடி தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் பாதசாரிகள் படும் அல்லல்களுக்கு முடிவே ஏற்படாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT