Published : 16 Jan 2017 10:37 AM
Last Updated : 16 Jan 2017 10:37 AM
பிரீமியம் செலுத்த தபால் மூலமாக மட்டுமின்றி, குறுஞ்செய்தி மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்ட எல்ஐசி திட்டமிட்டுள்ளது. இதற்காக, ‘வாடிக்கையாளர் தொடர்பு திட்டம்’ மூலம் பாலிசிதாரர்களின் செல்போன் எண், ஆதார், பான்கார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பகின்றன. வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து காப்பீடு குறித்து பிரச்சாரம் செய்யவும் எல்ஐசி திட்டமிட்டுள்ளது.
வைரவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எல்ஐசி நிறுவனம் கடந்த 1956 செப்டம்பர் 1-ம் தேதி ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 30 கோடி பாலிசிதாரர்களுடன் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி விளங்குகிறது. இதன் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.20.31 லட்சம் கோடி. எல்ஐசி நிறுவனத்தின் தென் மண்டலப் பிரிவுக்கு 2016-17ம் ஆண்டுக்கான பிரீமிய இலக்கு ரூ.3,300 கோடிதான் என்றபோதிலும், 9 மாதங்களில் ரூ.3,320 கோடிகளை அடைந்து சாதனை படைத்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் ஆயுள் காப்பீட்டு பாலிசியை இன்னும் அதிக அளவில் கொண்டுசெல்ல பல்வேறு நடவடிக்கைகளை எல்ஐசி எடுத்து வருகிறது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் எல்ஐசி மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது:
பிரீமியம் ரூ.30 மட்டுமே
கிராமப்புற மக்களிடம் ஆயுள் காப்பீட்டின் அவசியம் குறித்து விளக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ‘மைக்ரோ இன்சூரன்ஸ்’ திட்டங்களை செயல்படுத்துகிறோம். இதன்மூலம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காப்பீட்டுத் தொகைக்கு ரூ.30 பிரீமியம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
முதியோருக்கான திட்டம்
வயதானவர்கள் முதுமையில் நோய்களாலும், தனிமையிலும் அவதிப்படுகின்றனர். அவர்கள் கையில் பணமின்றி கஷ்டப்படுவதை தடுக்கும் நோக்கில் ‘ஜீவன் அட்சயா-6’ என்ற ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உத்தரவாதத்துடன் கூடிய 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1,000 கோடிக்கு இந்த பாலிசியை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன்மூலம், வயதான காலத்தில் பணமின்றி கஷ்டப்படும் நிலை வராது.
சமூகத்தில் உள்ள அனைவரும் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி அடிப்படையில் ஒவ்வொருவராகச் சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். 2020-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட தீர்மானித்துள்ளோம்.
புது ஏஜென்ட்கள் நியமனம்
இதுதவிர, ஏற்கெனவே பாலிசி எடுத்துள்ளவர்களுக்கு பல்வேறு சிறப்பு சேவைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன்படி, பிரீமியம் கட்டுவதற்கு நினைவூட்டல் செய்யும் வகையில் தபால் மூலமாக மட்டுமின்றி, அவர்களுக்கு குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்ப உள்ளோம். பிரீமியம் தொகை செலுத்தப்பட்டதும், அதுகுறித்த தகவல்கள் மற்றும் கிளைம் உள்ளிட்ட தகவல்களையும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக ‘வாடிக்கையாளர் தொடர்பு திட்டம்’ வாயிலாக அனைத்து வாடிக்கையாளர்களின் செல்போன் எண், ஆதார், பான்கார்டு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சென்னை மண்டலத்தில் உள்ள 9 கிளைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது 1.24 லட்சம் ஏஜென்ட்கள் உள்ளனர். மார்ச் மாதத்துக்குள் மேலும் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT