Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM
சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 27,500 பார்வையாளர்கள் குவிந்தனர். பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறைக் காலமான கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.45 லட்சம் பேர் விலங்குகளை பார்த்து ரசித்தனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் புத்தாண்டன்று 6,100 பேர் குவிந்தனர்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய மிருகக் காட்சி சாலைகளில் ஒன்றாகும். இங்கு பறவைகள், விலங்குகள் மற்றும் ஊர்வன என 152 வகைகளைச் சேர்ந்த 1,479 உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரையாண்டு விடுமுறை
இங்கு லயன் சபாரி, பேட்டரி கார், சிறுவர் ரயில் போன்ற இதர அம்சங்களும் இருப்பதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் வந்து செல்கின்றனர். பள்ளி விடுமுறைக் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
கடந்த, புதன்கிழமையுடன் முடிவடைந்த அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை யின்போது மட்டும் வியப்பூட்டும் வகையில் 1.5 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த பூங்காவுக்கு வழக்கமான நாட்களில் 5 ஆயிரம் பேர் வருவார்கள். சனிக்கிழமைகளில் 10 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமைகளில் 15 ஆயிரம் பார்வையாளர்களும் வருகின்றனர். இதுவே பள்ளி விடுமுறை காலங்களில் வரும் சனிக்கிழமைகள் என்றால் தினமும் 15 முதல் 20 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமைகளில் 20 முதல் 25 ஆயிரம் பேரும் வருவார்கள்.
இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கி 30-ம் தேதி வரை 6 நாட்களில் மட்டும் 1.15 லட்சம் பேர் இப்பூங்காவுக்கு வந்து விலங்குகளை பார்த்து ரசித்துச் சென்றுள்ளனர். செவ்வாய்க் கிழமை உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய் வார விடுமுறை (டிசம்பர் 31) தினமாகும். மறுநாளான புதன்கிழமை, புத்தாண்டு தினமென்பதால் 27,500 பேர் வந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
வேடந்தாங்கல் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் புத்தாண்டன்று பார்வையாளர்களின் வருகை மும்மடங்கு அதிகரித்தது. இங்கு புதன்கிழமையன்று 6100 பேர் வருகை தந்தனர். இதன் மூலம் 32 ஆயிரம் ரூபாய் வசூலானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT