Published : 09 Jan 2017 01:59 PM
Last Updated : 09 Jan 2017 01:59 PM

நாகரீக கலாச்சாரத்தால் பாரம்பரிய காதணிகளை கைவிடும் பனியர்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பனியரின பெண்கள் மத்தியில் நாகரீகம் நுழைந்ததால், தாங்கள் அணிந்து வந்த ஓலை காதணி கலாசாரத்தை கைவிட்டு வருகின்றனர். இதனால் இந்த காதணி கலாச்சாரம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் என 6 பண்டைய பழங்குடியினர் உள்ளனர். இதில், பனியர் இன மக்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மட்டுமே வசிக்கின்றனர்.

பனியரின பெண்களின் முக்கிய அடையாளம் தங்கள் காதுகளில் அணியும் காதணிகள்.

பிரத்யேகமான அந்த காதணி கள், பார்ப்பவர்களை சற்றென்று திரும்பிப் பார்க்க வைக்கும்.

வனப்பகுதியின், சதுப்பு நிலத்தில் காணப்படும், தழைகளை வெட்டி எடுத்து, சாம்பல் கலந்து காய வைக்கின்றனர். நன்றாக காய்ந்தவுடன், அதனை சிறிய வட்டமாக மடித்து, காதில் அணிகின்றனர்.

சிறிய ஓட்டையாக காணப்படும் காதில் மாட்டப்படும் இந்த காதணி, நாளடைவில் விரிவடைந்து, காதின் துளையும் அதற்கேற்ற முறையில், பெரிதாகி வருகிறது. சிலர் இந்த ஓலை காதணியில், கேரள மாநிலத்தில் கிடைக்கும் சிவப்பு நிற மணிகளைக் கோர்த்து அழகு சேர்க்கின்றனர். சிறிய காதில் பெரியளவில் காணப்படும் ஓலை காதணிகள், பார்வையாளர்களை கவர்கின்றன.

தொண்டு நிறுவனங்கள் மூலம், பழங்குடியின கிராமங்களை நாடும், வெளிநாட்டு பெண்கள் மத்தியில், இந்த காதணி பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில், நவ நாகரீகம் பழங்குடியினர் மத்தியிலும் புகுந்து விட இந்த காதணி கலாச்சாரம் அழிந்து வருகிறது. இதில், பனியர் இன மக்கள் மத்தியில், இளைய சமுதாயத்தினர் நாகரீகத்தால் கவரப்பட்டு, தங்கள் கலாசாரத்தில் இருந்து மெல்ல, மெல்ல விலகி வருகின்றனர். வயதான பெண்கள், தங்கள் கலாசாரத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். உடை மற்றும் அணிகலன்களில், இன்றும் பழங்கால முறையையே பின்பற்றுகின்றனர்.

கூடலூர் அருகே காணம்புழாவைச் சேர்ந்த பனியர் மூதாட்டி மாதி கூறும் போது, ‘எங்கள் காலத்தில் இந்த காதணி அணிந்து, காசு மாலை போட்டுத் தான், இளம்பெண்கள் வெளியில் நடப்பது வழக்கம். இன்று எல்லாமே மாறிவிட்டது. கலர், கலராக கடையில் விற்கும், பிளாஸ்டிக் காதணிகளை போட்டுக் கொள்வதில் தான், இன்றைய இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பழைய கலாசாரத்தை இவர்கள் மறக்காமல் காப்பாற்ற முன் வர வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x