Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி சுழற்கோப்பை வென்றது தமிழகம்- 71 ஆயிரம் பேர் கண்டுரசித்தனர்

சென்னையில் முடிவடைந்த தென்னிந்திய அறிவியல் பெருவிழா கண்காட்சியை 53 ஆயிரம் மாணவர்களும் பொதுமக்கள் 16 ஆயிரம் பேரும் கண்டுரசித்தனர். கண்காட்சியில் அதிகபட்சமாக 37 பரிசுகளை வென்ற தமிழகத்துக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

27-வது தென்னிந்திய அறிவியல் பெருவிழா கண்காட்சி சென்னை சேத்துப்பட்டு மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் இணைந்து நடத்திய இக்கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களின் 221 அறிவியல் காட்சிப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

தமிழகத்துக்கு 37 பரிசுகள்

கண்காட்சி நிறைவுவிழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா சிறந்த அறிவியல் காட்சிப் பொருட்களை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு அதிகபட்சமாக 37 பரிசுகளை தட்டிச்சென்றது. இதற்கான சுழற்கோப்பையை சபீதாவிடம் விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியக இயக்குநர் கே.ஜி.குமார் வழங்கினார்.

ஆந்திரம் 34 பரிசுகள், கேரளம், கர்நாடகம் தலா 31 பரிசுகள், புதுச்சேரி 29 பரிசுகளை வென்றன. என்.சி.எஸ்.எம். விருது, மாநில விருது மற்றும் ரொக்கப்பரிசு, புத்தக விருது, சிறப்பு பரிசு என 4 நிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தலைமையுரையாற்றினார். இணை இயக்குநர் தர்ம.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன் வரவேற்றார். நிறைவாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கே.சந்திரசேகர் நன்றி கூறினார். 5 நாட்கள் நடந்த அறிவியல் கண்காட்சியை 800 பள்ளிகளைச் சேர்ந்த 53 ஆயிரம் மாணவ, மாணவிகளும் 2,100 ஆசிரியர்களும் பொதுமக்கள் 16 ஆயிரம் பேரும் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x