Published : 18 Feb 2017 09:04 AM
Last Updated : 18 Feb 2017 09:04 AM
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். | முழு விவரம் >>எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி
பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:
நிகழ்நேர பதிவு நிறைவடைந்தது!
5.00 pm: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரிந்து திமுகவினர் ஆர்பாட்டம்.
4:40 pm: உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் கைது
மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
4.30 pm: ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது'' என்றார். அதன் விவரம்: >அதிமுக அரசை கலைக்கும் எண்ணத்துடன் திமுக செயல்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
4.10 pm: பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார். அதன் விவரம்: >மெரினா - காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம்
3.40 pm: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3.30 pm: எதிர்க்கட்சியினரே இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வெற்றி கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
3.15 pm: சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
3.10 pm: ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். நாங்கள் உடனே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவையில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால், வருத்தம் தெரிவித்த பின்னரும் அவையில் சபாநாயகர் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசியது விரும்பத்தக்கது அல்ல. சட்டப்பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிப்போம்" என்றார். அதன் விவரம்: >பேரவைக்குள் எங்களை உதைத்து சட்டைகளை கிழித்தனர்: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காட்டம்
3.05 pm: சட்டப்பேரவையில் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
3.00 pm: பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிக்கச் செல்வதாக ஸ்டாலின் தகவல். அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு.
2.50 pm: சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் அவையில் இருந்து வெளியேற மறுத்த ஸ்டாலின் உட்பட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
2.35 pm: பேரவையில் திமுகவினர் மற்றும் மு.க.ஸ்டாலினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ட்விட்டரில் கூறியுள்ளார்.
2.10 pm: சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
2.00 pm: சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா
1.50 pm: சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். > | சட்டப்பேரவை வன்முறை கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் |
1.47 pm: கூவத்தூரில் உள்ள கோல்டன் பே தனியார் விடுதி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுதியில்தான் கடந்த 8-ம் தேதி முதல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. >அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கிய கூவத்தூர் விடுதி திடீர் மூடல்
1.29 pm: சட்டப்பேரவை மீண்டும் ஒத்திவைப்பு. திமுகவினர் ரகளையால் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1.15 pm: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷமிட்டனர். "மாற்று, மாற்று தேதியை மாற்று" என தொடர்ந்து கோஷமிட்டனர். > | திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறல்; அவை 3 மணி வரை ஒத்திவைப்பு |
1.13 pm: பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
1.03 pm: ஒத்திவைப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது என வேதனை தெரிவித்தார் சபாநாயகர். அவை விதிகளின்படியே அவையை நடத்த தான் கடமைபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
12.58 pm: தலைமைச் செயலகம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
12.55 pm: அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். >| எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை |
12.25 pm: சட்டப்பேரவை வளாகத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. அவைக் காவலர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
12.15 pm : திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து புரசைவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதனும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.
12.10 pm: திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார்.
12.00 pm: ரகசிய வாக்கெடுப்பு கோரி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷம். >| பேரவையில் மைக், இருக்கைகள் உடைப்பு: ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவினரின் ரகளை |
11.57 am: ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக, காங். ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்திவரும் நிலையில் பேரவை கூடி 1 மணி நேரமாகியும் வாகெடுப்பை நடத்த முடியாமல் சபாநாயகர் திணறி வருகிறார்.
11.50 am: வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கூறினார். >| வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு; என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது: சபாநாயகர் தனபால் |
11.48 am: ''கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
11.45 am: எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
11.42 am: மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார்.
11.30 am: ரகசிய வாக்கெடுப்பே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர். > | வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு |
11.25 am: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
11.22 am: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சிறைக்கைதிகள் போல் அழைத்து வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
11.15 am: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் கதவுகள் அடைக்கப்பட்டன.
11.10 am: ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
11.05 am: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பேரவையில் 230 உறுப்பினர்கள் உள்ளனர்.
10.50 am: "எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை; எண்ணிக்கை இருந்ததால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். >| தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை கருத்து |
10.30 am: கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் வரத் தொடங்கினர்.
10.15 am: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலகம் வந்தடைந்தனர்.
10.00 am: சட்டப்பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனம் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வாயிற்பகுதியிலிருந்து ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்குள் நடந்தே சென்றார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
போர் நினைவிடத்திலிருந்து தனது சக எம்.எல்.ஏ.க்களுடன் நடந்து செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் | படம்:வி.கணேசன். |
9.45 am: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழியும் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் கூடி எடுத்துள்ள ஒருமித்த முடிவு இது என அவர் தெரிவித்தார். > | நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு |
9.40 am: நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
9.30 am: "தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடுக்கும் இன்றைய தினம் தர்ம யுத்தத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. மனசாட்சியின் குரலும், அம்மாவின் ஆன்மாவும் இன்றைய வாக்கெடுப்பில் ஓங்கி ஒலிக்கும் என நம்புகிறேன்" என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
9.25 am: நம்பிக்கை வாக்கெடுப்பு ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
9.20 am: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை 10 மணியளவில் ராஜ்பவனில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.
9.15 am: சென்னை சத்யா ஸ்டுடியோஸ் பகுதியில் ஓபிஎஸ். ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
9.10 am: தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.
9.05 am: தலைமைச் செயலகத்தைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன். |
9.00 am: திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
8.55 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகம் வந்தடைந்தார்.
தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம். |
8.50 am: அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கவில்லை. அதிமுகவில் அணிகளுக்கு இடமில்லை. கட்சியும், சின்னமுமே பிரதானம். மக்கள் விருப்பப்படி இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்றார். >| குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார்|
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ. அருண்குமார். |
8.45 am: சென்னை மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
8.40 am: கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை புறப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பாதுகாப்புடன் வாகனங்கள் புறப்பட்டன.
8.30 am:கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பினார். மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
8.00 am: நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, "இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார் கமல்.
முந்தைய நிகழ்வுகள்:
>>> முன்னதாக நேற்றிரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளார்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ''தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறக் கூடாது என்பதற்காக உடல்நிலையைக் கூட பாராமல் ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான். அவரது எண்ணங்கள் நிறைவேற அதிமுக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும்'' என்றார். >| அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்: ஓபிஎஸ் |
>>> அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது கட்சியின் விதிகளுக்குப் புறம்பானது. அவர் அதிமுகவில் செய்த நியமனங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் புகாருக்கு வரும் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. > | சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT