Published : 22 Sep 2016 12:08 PM
Last Updated : 22 Sep 2016 12:08 PM
கடந்த ஐந்து ஆண்டுகளில் திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல், பாதாள சாக்கடைத்திட்டம் ஆகியவற்றிற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாமலேயே தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எந்த அளவிற்கு மக்கள் பணியாற்றினர் என்பதை நகரப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
சாதனைகள்:
* கோபாலசமுத்திரம் கண்மாய், சிலுவத்தூர் ரோடு குளம் ஆகியவற்றை சுற்றிநடைபாதை அமைத்தது மக்களுக்கு நடை பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக பலனடைந்துள்ளனர்.
* பஸ் நிலையம் செல்லும் ஏஎம்சி சாலையின் மத்தியில் டிவைடர் அமைத்து மின்விளக் குகள் பொருத்தியது வரவேற்கத் தக்கது. நகரின் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
* ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் கூடுதல் நீர்த்தேக்கம் அமைக்க ரூ.20 கோடியில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் பயன் சில ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரியும்.
* திண்டுக்கல் மாநகராட்சி நிறைவு கூட்டத்தில் மேயர் வி.மருதராஜ் ஐந்து ஆண்டு சாதனைகளாக 13 பக்க அறிக்கையை வாசித்தார். பல திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா, பூமிபூஜை என்று துவக்கப்பட்டநிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராத திட்டங்கள் தான் இதில் உள்ளன. ஆண்டு கடைசியில் பூங்கா அமைக்க ஏற்பாடு என்பது உள்ளிட்ட சில திட்டங்களை செய்துவருகின்றனர்.
வேதனைகள்
* கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் பாதாளசாக்கடை பணி இதுவரை முடியவடையாதது வேதனையான விஷயம். இன்றளவும் நகரின் பல பகுதிகளில் சாலைகளை தோண்டி பாதுகாப்பற்ற நிலையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
* குடிநீர் விநியோகம் அனைத்து வார்டுகளுக்கும் முறையாக இல்லை. வாரம் ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறை என விநியோகிப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் பிரச்சினையில் எந்தவித மாற்றமும் இல்லாமல்தான் உள்ளது. இதற்கு தீர்வு எட்டப்படவில்லை.
* நகரின் மையப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பஸ் நிலையம் இட மாற்றம் சாத்தியமில்லாமல் போய் விட்டது. மீண்டும் தற்போதைய பஸ் நிலையத்தில் ரூ.5 கோடியில் பணிகள் என்பது வீண் வேலை என்றே மக்கள் கருதுகின்றனர்.
* பஸ்நிலையத்தை இடமாற்றம் செய்வது தான் நகரில் உள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண ஒரே வழி என்கின்றனர் பொதுமக்களும், வர்த்தகசங்கத்தினரும். பஸ்நிலை யம் இடமாற்றம் இல்லாதது நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்து வேதனையை அளிப் பதாக உள்ளது.
* திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமான வைகை ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் பேர ணை திட்டத்தை கடந்த திமுக நிர்வாகத்தில் முடக்கிவிட்டனர் என்று மாநகராட்சி கூட்டங்களில் குற்றம்சாட்டி வந்த மேயர், இதை செயல்படுத்த கடந்த 5 ஆண்டு களில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது வேதனையான விஷயம்.
* திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது உள்ள எல்லையே மாநகராட்சி ஆகியும் தொடர்கிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள 10 கிராம ஊராட்சிகள் இணைக்கப் படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு எந்த முயற்சியும் எடுக்காததால் நகர விரிவாக்கம், பஸ்நிலையம் இடமாற்றம் என்பதெல்லாம் சாத்தியம் இல்லாமல் போனது வேதனை.
* மொத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திண்டுக்கல்லில் சாதனைகளின் எண்ணிக்கையை விட மக்களின் வேதனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பது வேதனைதான்.
திருமலைசாமிபுரம், திண்டுக்கல்:
குடிநீர் பிரச்சினை தொடர் கதையாகத்தான் இருக்கிறது. குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கு பல வார்டுகளில் எந்த நீர்ஆதாரமும் இல்லாத நிலை உள்ளது. தனிநபர் கழிப்பறை கட்ட முடியாதவர்களுக்கு பொதுக் கழிப்பறை வார்டுகளில் முழுமையாக கட்டித் தரப்படவில்லை. தெருக்களில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. திருமலைசாமிபுரத்தில் சாலை அமைக்க அடிக்கல் நாட்டி சென்றார்கள். அதன்பின் ஓராண்டாகியும் பணிகளை தொடக்காமல் உள்ளனர். ஐந்து ஆண்டுகளில் வேதனைகள் தான் அதிகம் உள்ளது என்றார்.
எஸ். கோபாலகிருஷ்ணன், விவேகானந்தாநகர், திண்டுக்கல்:
பாதாளசாக்கடைப்பணி இன்னும் எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்று தெரியவில்லை. முடியும் வரை நகர மக்களின் வேதனை தொடர்கதை தான். நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தொலைநோக்கு திட்டமே இல்லை. இருசக்கர வாகனத்தில் நகருக்குள் சென்றுவருவது பெரும்பாடாக உள்ளது. ஆக்கிரமிப்புக்களை அகற்றினாலே இதற்கு தீர்வு ஏற்படும். அதை இதுவரை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக செய்ததில்லை. மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள குளங்களை சுற்றி பேவர்பிளாக்கற்கள் பதித்து வசதி ஏற்படுத்திக்கொடுத்ததை மட்டுமே சாதனையாக சொல்லமுடியும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT