Published : 13 Feb 2014 08:49 PM
Last Updated : 13 Feb 2014 08:49 PM

தமிழக பட்ஜெட்- மக்கள் தாகம் தீர்க்காத கானல் நீர்: விஜயகாந்த்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் தாகத்தை தீர்க்காத கானல் நீராக உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசின் 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் இரண்டாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துவிட்டு, மாநில பொருளாதாரத்தின் வளர்ச்சி 2013-2014ல் ஐந்து சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று சொல்வது வியப்பாக உள்ளது.

காவல்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கற்பழிப்பு புகார்கள் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக காவல்துறையின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது. காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தை குறைத்து, பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு வறட்சியில் உள்ளது. குடிநீர்ப் பற்றாக்குறை, கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, அதை எப்படி அரசு சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விளக்கம் ஏதும் இல்லை. கடந்தாண்டே பயிர்க்கடன் முழுமையாக கொடுக்கவில்லை. இந்த ஆண்டாவது விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையுமா?

புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசு அறிவித்தது. அவைகள் எந்த நிலையில் இருக்கிறது எனத் தெரியவில்லை. குறிப்பாக உடன்குடி மின் திட்டம் குறித்தும், தொடரும் மின்வெட்டு பிரச்சினை எப்பொழுது தீரும் என்பதற்கான விளக்கமும் இல்லை. மின்வெட்டே தமிழ்நாட்டில் இல்லை என்பதுபோல இந்த நிதிநிலை அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தொழில் வளர்ச்சிக்காக தென் மாவட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது.

இந்த அரசின் தவறான நிர்வாகத்தால் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு கொடுக்கப்படும் வட்டியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக 2014 - 2015 ஆண்டில் மாநில அரசு 25,000.22 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடன் தொகை 1,78,170.76 கோடி ரூபாயாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கடனுக்காக ஒவ்வொரு ஆண்டும் 15,463.90 கோடி ரூபாய் வட்டியாக அளிக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு. இதுதான் மூன்றாவது ஆண்டை நோக்கி செல்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை தமிழக மக்களின் தாகத்தை தீர்க்காத கானல் நீராக உள்ளது.

ஏற்கனவே அறிவித்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்த திட்டங்களையே மீண்டும் அறிவித்து, அரைத்த மாவையே அரைக்கும் நிதிநிலை அறிக்கையாக இருக்கிறது. இந்த ஆட்சியில் அம்மா உணவகம் என்ற திட்டம் முற்றிலும் பலன் இல்லாத திட்டமாக லஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கும் நிலையில், அதே போல் அம்மா மருந்தகம் என்ற புதிய திட்டத்தை அறிவித்திருப்பது வெறும் திட்டங்களை மட்டுமே தினந்தோறும் இந்த அரசு அறிவிக்கும் வெற்று திட்டங்களாகும்.

செயல்படாத திட்டங்களை அறிவிக்கும் இந்த அரசை, செயல் இழந்த அரசாக மக்கள் கருதுகிறார்கள். அந்த பாணியிலேயே இந்த நிதிநிலை அறிக்கை கோடிகளை மட்டும் சொல்லி, மக்களை ஏமாற்றும் வெறும் அறிவிப்பாக உள்ளது.

பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அறிவித்திருப்பது, சுயநல அரசின் செயலாகும். ஆனால் அடுத்த தலைமுறையை எதிர்நோக்கி அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கையே மக்கள் போற்றும் நிதிநிலை அறிக்கையாக இருக்கும். எனவே, மக்கள் போற்றும் நிதிநிலை அறிக்கையாக இது இல்லாமல், மக்கள் தூற்றும் நிதிநிலை அறிக்கையாக இது உள்ளது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x