Published : 21 Feb 2014 02:50 PM
Last Updated : 21 Feb 2014 02:50 PM
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 143 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு:
'ஏழை எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிறப்பு சிகிச்சை பெறும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடம், உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்என்றும், இந்த மருத்துவமனை, புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்றும் முதல்வர் 19.8.2011 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, இந்த கட்டடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக 32 கோடியே 90 லட்சம் ரூபாயும், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்க 110 கோடியே 24 லட்சம் ரூபாயும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்புப் பிரிவுகளோடு, 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
6 தளங்கள்:
இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் 2 அறுவை அரங்குகள், முதல் தளத்தில் 2, ஐந்தாவது தளத்தில் 6 மற்றும் ஆறாவது தளத்தில் 4 என மொத்தம் 14 அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வசதிகள்:
நோயாளிகள் பயன்பாட்டிற்காக, தரைத் தளத்திலிருந்து 6வது தளம் வரை, சாய்தளப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 300 கழிப்பறைகள் தவிர, கூடுதலாக 212 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள 17 மின்தூக்கிகள், படுக்கையுடன் கூடிய நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சிறப்புப் பிரிவுகள்:
தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் உள் நோயாளர் பிரிவு, மயக்க நிலை மீள் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளுக்கு கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மைய ஆய்வகம், ரத்த வங்கி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு போன்ற உயர் மருத்துவ வசதிகளும், மருத்துவமனையின் தேவைகளுக்காக கூடுதல் மின்சார பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட மருத்துவ வாயுக்கள் வைப்பு அறைகள், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு,சலவை நிலையம், சேவை துறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுப் பிரிவுக்கு தேவைப்படும் கட்டில்கள் படுக்கைகள், தீவிர மையத்திற்கான கட்டில்கள் மற்றும் தேவைப்படும் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன.
பரமாரிப்புப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்:
இம்மருத்துவமனையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை புற ஆதார முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தற்போது இந்தப் பணிகளில் 150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் நோயாளிகள் செல்வதற்கு வசதியாக, மின்கலத்தால் செயல்படும் கார்கள் வாங்கப்பட்டுள்ளன.
முழு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனையின் உட்புறம் 150, வெளிப்புறம் 10 என மொத்தம் 160 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்புக்காக 200 அகத் தொலைபேசி வசதிகளும், 500 உள்ளுர் தொலைபேசி இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பணியிடங்கள்:
முதற்கட்டமாக 83 மருத்துவர் பணியிடங்களும், 232 மருத்துவம் சாரா பணியிடங்களும், 20 கோடியே 73 லட்சம் ரூபாய் தொடர் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயர் கல்வித் தகுதியுடன், பல்லாண்டு பணியாற்றிய அனுபவமிக்க திறன் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு, உயர் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவக் கருவிகள் உதவியுடன், நல்ல காற்றோட்டமான சுகாதாரமான சூழ்நிலையில்,உயர்சிகிச்சை அளித்திடும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் இன்று காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில், மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு உயர் சிறப்பு சிகிச்சை வழங்கிடும் மையமாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படும்' என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 258 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு மருத்துவமனை கட்டடங்களைத் திறந்து வைத்து புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவையையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT