Published : 26 Feb 2014 08:54 PM
Last Updated : 26 Feb 2014 08:54 PM
தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவு நீரில் இருந்து இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டப்பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, மாநகராட்சி சார்பில், டேங்கர் லாரிகளில் கழிவுநீரை சேகரித்து, பக்கிள் ஓடையில் கொட்டுகின்றனர். இதனால், சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் நோக்கத்தில் மாநகராட்சி சார்பில், கழிவுநீரில் இருந்து இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ. 32 லட்சம் செலவில் தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில், இந்த இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.
தூத்துக்குடியை சேர்ந்த `கிரேஸ் லைன் பயோ எனர்ஜி’ நிறுவனம், இந்நிலையத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் (பொறுப்பு) பி.சேவியர், ஆணையர் எஸ்.மதுமதி, பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1.20 லட்சம் லிட்டர் கழிவுநீர்
புதிய திட்டம் குறித்து `தி இந்து’ நாளிதழிடம், ஆணையர் எஸ்.மதுமதி கூறியதாவது: மாநகராட்சிப் பகுதியில் தினமும் 1.20 லட்சம் லிட்டர் கழிவுநீர், லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, பக்கிள் ஓடையில் கொட்டப்படுகிறது. இதனால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கழிவுநீரை லாரிகள் மூலம் தருவைகுளத்துக்கு கொண்டு வந்து, இங்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் கொட்டப்படும். அதில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படும்.
கழிவுநீருடன், சாணம் மற்றும் மக்கும் குப்பைகளும் சேர்க்கப்படும். இந்த நிலையத்தில் இருந்து, 400 கனமீட்டர் இயற்கை எரிவாயு தயாரிக்கப்படும். இந்த இயற்கை எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்ப இங்கேயே வசதி ஏற்படுத்தப்படும். சிலிண்டர்களில் நிரப்பப்படும், இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மாநகராட்சி குப்பை லாரிகள், தண்ணீர் லாரிகள், கழிவுநீர் லாரிகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இங்கிருந்து 62.5 கே.வி. அளவுக்கு மின்சாரம் தயாரிக்கப்படும். இப்பகுதியில் மின்சார வசதி இல்லை. எனவே இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு மின் விளக்குகள் மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும்.
மாநகராட்சி கழிவுநீர் மட்டுமின்றி, தனியார் கழிவுநீரும் இங்கு கொண்டுவரப்படும். செப்டிக் டாங்க் லாரிகள் இனிமேல் பக்கிள் ஓடையிலோ அல்லது மாநகரப் பகுதியிலோ கழிவுநீரை கொட்ட முடியாது. அவ்வாறு கொட்டினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எரிவாயு தயாரித்தது போக, மீதம் வெளியாகும் கழிவுகள், இயற்கை உரமாக பயன்படுத்தப்படும். வெளியேறும் உபரி தண்ணீரை கொண்டு இப்பகுதியில் மரங்கள் வளர்க்கப்படும், என்றார் ஆணையர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT