Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM
‘‘திமுகவின் தூண்டுதலின் பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திவிட்டு, இந்த பதற்றத்தைப் பயன்படுத்தி பாமகவினர் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்துகின்றனர்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தும் வன்முறை கும்பல்கள், அதனால் ஏற்படும் பதற்றத்தைப் பயன்படுத்தி பாமக கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, விளம்பரப் பதாகைகளை சேதப்படுத்துவது, பிரச்சாரத்துக்குச் செல்லும் பாமக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் அரியூர், ஆரணி தொகுதியில் உள்ள குண்ணத்தூர், புதுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலைகள் திட்டமிட்டே சேதப்படுத்தப்பட்டு, பாமகவினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட குடிமன்னூரில் பாமக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வேலுவின் கார் மீதும், விழுப்புரம் மாவட்டம் மிட்டாமண்டகப்பட்டு என்ற இடத்தில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் மீதும், நாகை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் மயிலாடுதுறை பாமக வேட்பாளர் அகோரம் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
உண்மையில் திமுக தூண்டுதலின் பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திவிட்டு, பாமகவினர் மீது வீண் பழி சுமத்தி வருகின்றனர். இவ்வாறு வன்முறையைத் தூண்டும் செயல்களில் திமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஈடுபட்டிருக்கிறது.
எனவே, அம்பேத்கர் சிலைகளை மையமாக வைத்து அரங்கேற்றப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும் நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாக நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT