Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 155 குழந்தைக் காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. இந்தக் காப்பகங்களில் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் கடைபிடிக்கின்றனவா என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட சமூகநல அலுவலர் சற்குணா, மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஆர்.என்.மணிகண்டன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனசேகர பாண்டியன் ஆகியோர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
இதில் 31 காப்பகங்கள் விதிகளை மீறியிருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் அரசு அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக 19 காப்பகங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 6 காப்பகங்கள் கடந்த மாதம் மூடப்பட்டன.
சென்ற மாதம் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்ததால், காப்பகங்களை மூடும் நடவடிக்கையை தற்காலிகமாக சமூக நலத்துறை நிறுத்தி வைத்திருந்தது. தேர்வுகள் முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் காப்பகங்களை ஆய்வு செய்து, மூடும் பணி தொடங்கப்பட்டது.
படப்பையில் இயங்கி வந்த எப்ரான் காப்பகத்தில், ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக தங்க வைத்திருந்தது, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தையை தங்க வைத்திருந்தது, போதிய கழிவறை வசதியின்மை போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அக்காப்பகம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. அதில் தங்கவைக்கப்பட்டிருந்த 18 குழந்தைகள் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.
அதே பகுதியில் இயங்கி வந்த மற்றொரு காப்பகமான எல்ஷாடையில் சோதனை நடத்தியபோது, ஆண், பெண் குழந்தைகளை ஒரே இடத்தில் தங்க வைத்தது, போதிய ஊழியர்கள் இல்லாதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அந்த காப்பகமும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. அங்கு தங்கியிருந்த 7 குழந்தைகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
விதிகளை மீறும் காப்பகங்கள் அனைத்தும் விரைவில் சோதனை நடத்தி மூடப்படும் என்று குழந்தைகள் நலக்குழு தெரிவித்துள்ளது.
இதேபோல் குன்றத்தூர் அடுத்த கருகம்பாக்கத்தில் இயங்கி வந்த கிறைஸ்ட் விஷன் காப்பகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் அக்காப்பகமும் விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அக்காப்பகம் மூடப்பட்டு, அங்கு தங்கியிருந்த 6 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதன்படி ஒரே நாளில் 3 காப்பகங்கள் மூடப்பட்டு 31 குழந்தைகள் வேறு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT