Published : 05 Apr 2017 11:02 AM
Last Updated : 05 Apr 2017 11:02 AM
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப் படும் ஏற்காடு உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக மதுபானக் கடைகளே இல்லாத சுற்றுலாத் தலம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் இருந்த 5672 மதுபானக் கடைகளில் 3,316 கடைகள் மூடப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 288 மதுபானக் கடைகளில் 135 கடைகள் மூடப்பட்டன. இதில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டன.
ஏற்காட்டில் பேருந்து நிலையம், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவியும் இடமான ஏற்காடு ஏரி ஆகிய இடங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் இருந்தன. இந்த இரு கடைகளில் ஒன்று தமிழக அரசின் உத்தரவால் ஏற்கெனவே அகற்றப்பட்ட நிலையில், தற்போது மீதமிருந்த ஒரு கடை உச்சநீதிமன்ற உத்தரவினால் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லும் தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் 2 தனியார் ஹோட்டல்கள் ஆகியவற்றில் இருந்த பார்-களின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்காரண மாக, மதுபானக் கடைகள் இல்லாத சுற்றுலாத்தலம் என்ற பெருமை ஏற்காட்டுக்கு கிடைத்து உள்ளது.
ஏற்காடு மலை கிராமங்களில் செம்மநத்தம் கிராமத்தின் உட்பகுதியில் மட்டும் தற்போது ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
இதேபோல், மேட்டூர் நகரில் செயல்பட்டு வந்த 9 மதுபானக் கடை களில் 8 கடைகளும், ஆத்தூர் நகரில் இருந்த 3 கடைகளில் 2 கடைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT