Published : 22 Jun 2016 01:49 PM
Last Updated : 22 Jun 2016 01:49 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளின் செல்வாக்கை மீறி கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அதிமுக உள்ளது. மாநில அரசின் நலத்திட்டங்கள் கைகொடுக்கும் என நம்பும் புதிய மாவட்டச் செயலாளர் விஜயகுமார், கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்யப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. அனைத்து தேர்தல்களிலும் இங்கு காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளே முத்திரை பதித்துள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியே குமரியின் 6 தொகுதிகளையும் கைப்பற்றியது.
விளவங்கோடு தொகுதியில் வைப்புத் தொகையையும் அதிமுக இழந்துவிட்ட நிலையில், மாவட்டச் செயலாளராக இருந்த தளவாய் சுந்தரம் மாற்றப்பட்டார். புதிய மாவட்டச் செயலாளராக வழக்கறிஞர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரையே ராஜ்யசபா எம்.பி.யாகவும் அதிமுக தலைமை தேர்வு செய்தது.
கட்சிக்குள் நெருடல்
அதிமுகவின் பல நிர்வாகிகள் பொறுப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் கட்சியின் முக்கிய பதவியும், பொறுப்புகளும் விஜயகுமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. கட்சி அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அதிகம் நெருக்கம் காட்டாத விஜய குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கு மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. அதேநேரம் கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா முடிவை எதிர்க்க முடியாமல், நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி காக்கின்றனர்.
கூட்டம் எப்போது?
அதிமுக தரப்பில் ஒன்றியம், பேரூர், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட உட்கட்சி அணியின ருடனான ஆலோசனைக் கூட்டத்துக் கான ஏற்பாடுகளை இதுவரை புதிய மாவட்டச் செயலாளர் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
அலுவலகம் மூடல்
இதுபோல் தளவாய் சுந்தரம் மாவட்டச் செயலாளராக இருந் தபோது நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளி அருகே செயல்பட்டு வந்த மாவட்ட கட்சி அலுவலகம் தற்போது செயல்படவில்லை. புதிதாக மாவட்ட அதிமுக அலுவலகம் இதுவரை திறக்கப்படவும் இல்லை.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, `அரசு சுற்றுலா மாளிகை மற்றும் பிற இடங்களில் தான் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்தித்து பேசி வருகிறோம். புதிய மாவட்டச் செயலாளர் விஜயகுமாரை பொறுத்தவரை ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் சிக்காத நிர்வாகி என்ற பெயர் உள்ளது. அதே நேரம் அவர், கட்சி மேல்மட்ட தொடர்புகளை மட்டும் நம்பி இருக்காமல், அடிமட்ட அதிமுக தொண்டர்களிடமும் சகஜமாக நெருங்கி பழகி கட்சி வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்’ என்றார் அவர்.
விஜயகுமார் பேட்டி
அதிமுக தொண்டர்களின் குற்றச் சாட்டு குறித்து மாவட்ட செயலாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது,
`அதிமுகவை பொறுத்தவரை அனைத்துமே அம்மா தான். கட்சியின் வளர்ச்சி, வெற்றி அனைத்தும் அவரின் செயல்திறனால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது.
இதற்காக கட்சி நிர்வாகிகள் யாரும் தங்களால் தான் மாவட்டத் தில் கட்சி வளர்ந்தது என பெருமைகொள்ள முடியாது.
மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கட்சி தொண்டர் களையும், நிர்வாகிகளையும் அரவ ணைத்துச் செல்கிறேன். அதிமுக புதிய மாவட்ட அலுவலகம் விரைவில் திறக்கப்படும். அதற் கான நல்ல இடத்தை தேர்வு செய்து வருகிறோம். அம்மாவின் நலத்திட்டங்கள் கட்சி வளர்ச்சிக்கு கைகொடுக்கும். ஆர்ப்பாட்டமின்றி நிதானமான முறையில் அதிமுகவினரின் சமூகப் பணி குமரி மாவட்டத்தில் இனி இருக்கும்.
திட்டங்களில் ஆர்வம்
இம்மாவட்டத்தில் பரவலாக சாலைகள் பழுதான நிலையில் உள்ளன. கிராம சாலைகளில் இருந்து நெடுஞ்சாலை, தேசிய சாலைகள் அனைத்தையும் தரமானதாக சீரமைப்பதற்கு 2 மாதத்தில் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
அரசு பேருந்துகளை பழுது நீக்கியும், புதிய பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் பின்னர் பிற அடிப்படை பணிகள் நடைபெறும். இதைப்போல் அனைத்து பணிகளிலும் அரசு நிதி முழுமையாக செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் ஊழல் மற்றும் கமிஷன் போன்றவற்றிற்கு எந்த வகையிலும் இடம் அளிக்கமாட்டோம் என்றார் அவர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் கூட குமரி மாவட்டத்தில் இல்லாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அரசு திட்டங்களை ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT