Published : 02 Feb 2017 09:09 AM
Last Updated : 02 Feb 2017 09:09 AM
கடலில் மிதக்கும் எண்ணெய் படலம் காரணமாக பொதுமக்கள் மீன் வாங்க அஞ்சுகின்றனர். இதனால் காசிமேடு மீன் சந்தையில் கடந்த 4 நாட்களாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மொத்த உணவுத் தேவையில் 20 சதவீதத்தை மீன் உணவுகள் ஈடு செய்கின்றன. சென்னையை பொருத்தவரை மீன் உணவை வழங்கும் முக்கிய ஆதாரமாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் விளங்குகிறது. இந்த துறைமுகத்திலிருந்து 744 விசைப் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும், கட்டுமர படகுகளும் மீன்பிடிக்கச் செல்கின்றன. துறைமுக வளாகத்தில் இயங்கும் மீன் சந்தையில் வார நாட்களில் சுமார் 60 கடைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 300 கடைகளும் திறக்கப்படுகின்றன.
தற்போது எண்ணூர் துறைமுகம் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக எண்ணூர் முதல் திருவான்மியூர் கடலோரப் பகுதி வரை பரவியுள்ள எண்ணெய் படலத்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களும், கடல் ஆமைகளும் இறந்து மிதக்கின்றன. இதனால் பொதுமக்கள் மீன்களை வாங்க அஞ்சுகின்றனர். இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக காசிமேடு மீன் சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்துள்ளது. பொதுமக்கள் யாரும் மீன் வாங்க வராததால் அப்பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.
வருவாய் இழப்பு
இது தொடர்பாக அங்கு மீன் வியாபாரம் செய்யும் கலா என்பவர் கூறும்போது, “கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால், யாரும் மீன் வாங்க வரவில்லை. விலையை குறைத்து கொடுத்தாலும் வாங்க ஆளில்லை. பொதுமக்கள் மீன் உணவை தவிர்த்து வருவதால், எங்களிடம் மீன் வாங்கி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்க செல்வோர் 4 நாட்களாக வரவில்லை. இதனால் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். எங்களை நம்பி இங்கு மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களும் வருவாய் இழந்துள்ளனர்” என்றார்.
பெரிய காசிமேடு குப்பத்தைச் சேர்ந்த பைபர் படகு மீனவர் சண்முகம் கூறும்போது, “ஒருமுறை மீன்பிடிக்கச் சென்றால் டீசல் செலவு மட்டும் ரூ.2 ஆயிரம் ஆகும். யாரும் மீன் வாங்க வராததால், நாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கப்போவதில்லை. அதனால் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. தற்போது வருவாய் இல்லாத நிலையில், இந்த எண்ணெயை அகற்றும் பணிக்கு அழைத்துள்ளனர். வருமானத்துக்காக அப்பணிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறேன் ” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT