Published : 12 Sep 2016 09:47 AM
Last Updated : 12 Sep 2016 09:47 AM
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து அரிய ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிவகங்கை தீர்த்தத்துக்கு மேற்கே சிவகாமி அம்மன் சன்னதிக்கு தெற்கில் இருக்கிறது நூறுகால் மண்டபம். கி.பி. 1118 முதல் 1136 வரை சோழப் பேரரசின் மன்னனாக திகழ்ந்தவன் விக்கிரம சோழன். இவனது காலத்தில் முதன்மை அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் விளங்கிய நரலோக வீரன் என்பவன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளான். மரங்கள் நட்டு, நந்தவனம் அமைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து தில்லையம்பதியை எழில் நகரமாய் மாற்றிய நரலோக வீரன்தான் நூறுகால் மண்டபத்தையும் எழுப்பினான் என்கிறது கல்வெட்டுச் சான்று.
30 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு
வழக்கு விவகாரத்தால் 30 ஆண்டுகளாக பூட்டிவைக்கப் பட்டிருந்த இந்த மண்டபம் சமீபத்தில் திறக்கப்பட்டு அற நிலையத் துறையால் ரூ.2 கோடி செலவில் தற்போது புனரமைக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி யின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.கண்ணன் ஆகியோர் கடந்த 3 நாட்களாக மேற்கொண்ட ஆய்வில் நூறுகால் மண்டபத்தில் சோழர் காலத்து ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:
ஒப்பனை இல்லாத ஓவியங்கள்
முனைவர் சு.கண்ணன்: தஞ்சை பெரிய கோயில், நார்த்தாமலை, மலையடிப்பட்டி ஆகிய 3 இடங்களில் மட்டும்தான் சோழர் கால ஓவியங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 4-வதாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் சுண்ணாம்புக் கலவை பூசி, அது காய்வதற்குள் ஓவியங்களை வரையும் பற்றோவிய முறையில் (Mural Paintings) இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நாயக்கர் காலத்து ஓவியங்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருக்கும். சோழர் கால ஓவியங் களில் ஒப்பனை இருக்காது. நூறுகால் மண்டபத்தில் உள்ள ஓவியங்களிலும் ஒப்பனை இல்லை. மண்டப விதானத்தில் வட்ட வடிவ கொடிக் கருக்குகளில் 8 இதழ்கள் கொண்ட பூக்கள் வரை யப்பட்டுள்ளன. சில இடங்களில் சாய் சதுரங்களுக்குள் பூக்கள் வரையப்பட்டுள்ளன. ஓரங்களில் கொடிக்கருக்கு ஓவியங்கள் ‘பார்டர்’ போல வரையப்பட்டுள்ளன. மொத்தம் 7 இடங்களில் மட்டுமே ஓவியங்களை அடையாளப்படுத்த முடிந்துள்ளது. அவை அனைத்துமே அழிந்த நிலையில் உள்ளன.
தஞ்சை போலவே வண்ணங்கள்
முனைவர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன்: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அடர் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி உள்ளிட்ட வண்ணங்கள்தான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சையில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக் கும் ஓவியங்கள் வரையப்பட்டுள் ளன. இங்கு அதுபோன்ற உருவ சித்தரிப்புகளைப் பார்க்க முடிய வில்லை. ஆனாலும், சோழ மன்னனுக்காக இவ்வளவு நேர்த் தியான மண்டபத்தை எழுப்பிய நரலோக வீரன் நிச்சயம் சோழப் பேரரசனின் உருவத்தையோ, தில்லை நடராஜரின் திருமேனி யையோ ஓவியமாகத் தீட்டி, காலப்போக்கில் அது அழிந்திருக்க வேண்டும். தற்போது கிடைத்துள்ள அரிதான ஓவியங்கள் மீது பூச்சுக் கள் எதுவும் பூசிவிட வேண்டாம் என ஸ்தபதியிடம் கேட்டுள்ளோம். ஓவியங்களைப் புதுப்பிப்பது சிரமம். கண்ணாடிச் சட்டங்கள் அமைத்து மிக முக்கியமான இந்த வரலாற்றுச் சான்றை மேலும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தஞ்சை பெரிய கோயிலின் உள் திருச்சுற்றில் வரையப்பட்டுள்ளவை சோழர் கால ஓவியங்கள் என்பதை யும் 1931-ல் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமிதான் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT