Published : 15 Feb 2017 07:54 AM
Last Updated : 15 Feb 2017 07:54 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதித்தது சரியா? - ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருத்து

அதிமுகவின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வி.கே.சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை தமிழக ஆளுநர் காத்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

கே.என்.பாஷா (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆட்சியமைக்க யாரையும் அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததாக கூறுவதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு என கூறிவிட்ட பிறகு, அதுவரை பொறுத்திருந்து முடிவு எடுக்கலாம் என ஆளுநர் தன் சுயவிருப்புரிமை அதிகாரத்தின் அடிப்படையில் செயல்பட்டுள்ளார். இதை தவறு எனக் கூற முடியாது.

டி.ஹரிபரந்தாமன் (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)

என்னைப் பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டுக்கு சிறப்பான தகவலை கூறியுள்ளது. ஒருவர் ஊழல் செய்தால், அவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் குற்றவாளிதான் என்பதை நீதித்துறை வெளிப்படையாக நிரூபித்துக் காட்டியுள்ளது. அதே நேரத்தில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெரும்பான்மை பலம் இருந்தும் ஆட்சியமைக்க யாரையும் அழைக்காமல் காலதாமதம் செய்ததை ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது. தீர்ப்பு வரும்வரை பொறுங்கள் என அவர் கூறியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விஷயத்தில் யாருடைய உத்தரவுப்படியோ ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

என்ஜிஆர் பிரசாத் (மூத்த வழக்கறிஞர்)

என்னைப் பொருத்தமட்டில் ஆளுநர் காலதாமதம் செய்தது தேவையில்லாத ஒன்று. உண்மையான மக்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்க வேண்டுமென்றால், பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஒரு கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரும்போது அதை ஏற்று ஆளுநர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து எதற்காக அவர் காலதாமதம் செய்தார்? யாருக்காக மவுனம் காத்தார்?. உச்ச நீதிமன்றம் இவ்வளவு காலதாமதமாக தீர்ப்பை சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த தீர்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஒரு சிலர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த தீர்ப்பே வந்திருக்காது என்கின்றனர். அப்படி கூறுவது நீதித்துறையை அவமதிப்பது போலாகும். ஊழல்வாதிகளைத் தண்டித்து நல்லவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டிய பொறுப்பு மக்களிடம்தான் உள்ளது.

ஏ.ஏ.செல்லையா (மூத்த வழக்கறிஞர்)

சட்டம், தர்மம், நியாயம் இந்த மூன்றின் அடிப்படையில்தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநருக்கென உள்ள தனிப்பட்ட சுயவிருப்புரிமை அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதைத்தான் ஆளுநரும் செய்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நீதித்துறை இன்னும் உயிருடன்தான் இருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

பி.விஜயேந்திரன் (மூத்த வழக்கறிஞர்)

ஒருநாள் முதல்வர் என்றாலும் அதைப்பற்றி ஆளுநருக்கு என்ன கவலை. பெரும்பான்மை பலத்துடன் ஒருவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதை ஆளுநர் தடுக்கிறார் என்றால், ஒரு மாநிலத்தின் உரிமையை ஆளுநர் பறித்து விட்டார் என்றுதான் அர்த்தம். அரசியல் சமமற்ற ஒரு அசாதாரண சூழலில் ஆளுநரின் கால தாமதத்துக்கும், உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள இந்த தீர்ப்புக்கும் நிறைய தொடர்பு உள்ளது. இந்த தீர்ப்புக்கான தேதிகூட சேர்க்கப்பட்ட ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் தீர்ப்பு வரவேற்கக்கூடியது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வி.ராகவாச்சாரி (மூத்த வழக்கறிஞர்)

ஒருவேளை ஆளுநர் இந்த தீர்ப்புக்கு முன்பாகவே வி.கே.சசிகலாவை ஆட்சியமைக்க கோரியிருந்தால், தற்போதுள்ள சூழலில் அது முதல்வர் பதவியை மீண்டும் அவமானப்படுத்தியது போல் ஆகியிருக்கும். சட்ட ரீதியாக ஆளுநர் பொறுமை காத்தது மிகவும் நல்லது. யாரை எப்போது அழைக்க வேண்டும் என்பது அவருக்கான தனிப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டது. எல்லாவற்றையும் சட்ட ரீதியாக யோசித்துத்தான் ஆளுநர் காலதாமதம் செய்துள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x