Published : 05 Mar 2017 09:45 AM
Last Updated : 05 Mar 2017 09:45 AM
மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் நோக்கில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை, எனது பேச்சு அவர் களை புண்படுத்தி இருந்தால் அதற்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
அதிமுக-வில் இருந்த நடிகர் ராதாரவி கடந்த 28-ம் தேதி திமுக-வில் இணைந்தார். இதைத் தொடந்து சென்னை ’மின்ட்’ பகுதியில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வைகோவும் ராமதாஸும் குறைமாத குழந்தைகள் என்று விமர்சனம் செய்ததுடன் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும் என தனது பேச்சாலும் உடல் மொழியாலும் கேலியும் கிண்டலு மாக விமர்சித்தார்.
இந்த உடல்மொழி விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, கடும் விமர் சனங்களை எதிர்கொண்டு வருகிறார் ராதாரவி. முக்கியமாக திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி., ’ராதாரவி அவர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டர்கள் இதை ஏற்க மாட் டார்கள். உடல்கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம்தான் தாண்டமுடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்’ என்று தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இவரைப் போலவே கவிஞர் சல்மா, மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பினர் உள்ளிட்டவர்களும் ராதாரவிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் குறித்து நடிகர் ராதாரவியிடம் கேட்டபோது, ’மாற்றுத்திறனாளிகளையும் ஆதரவற் றோரையும் பெரிதும் மதிப்பவன் நான். மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஒன்றுக்கு எனது தந்தையாரின் பெயரில் வகுப்பறை ஒன்றை கட்டித் தந்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கில் எப்படிப் பேசுவேன்? பொதுக்கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியான விமர்சனம்தானே தவிர, மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லப் பட்டது இல்லை.
எனது பேச்சு தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்திலிருந்தும் வேறுபலரும் என்னிடம் ஆதங்கப் பட்டார்கள். கனிமொழி அவர்களை நானே தொடர்பு கொண்டு என் தரப்பு விளக்கத்தைச் சொன்னேன்.
மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் நலன் விரும்பிகளுக்கும் ‘தி இந்து’ வாயிலாக நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், மாற்றுத்திறனாளிகளை சிறுமைப் படுத்த வேண்டும் என்ற நோக் கத்திலோ அவர்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ நான் அந்தக் கருத்துகளை தெரிவிக்கவில்லை. அது முழுக்க முழுக்க அரசியல். ஒருவேளை, எனது பேச்சு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக உங்களிடம் நான் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT