Published : 22 Jun 2016 01:52 PM
Last Updated : 22 Jun 2016 01:52 PM
திருநெல்வேலி மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2016-17-ம் நிதியாண்டுக் கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பலவும், பல ஆண்டுகளாக திரும்பத் திரும்ப கூறப்பட்டவையே.
குடிநீர் திட்டங்கள்
தனிநபர் குடிநீர் விநியோகம் நாளொன் றுக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில், இம்மாநகராட்சியில் அடுத்துவரும் 30 ஆண்டுகளில் எதிர்பார்க்கப் படும் 7 லட்சம் மக்கள் தொகைக்கு தன்னிறைவாக குடிநீர் வழங்க கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. இதனை அரியநாயகி புரம் அணைக்கட்டின் நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து பெறுவதற்கு ரூ.230 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை, கடந்த 27.1.2014-ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கியிருந்தது.
இத்திட்டம் குறித்து கடந்த 2 நிதியாண்டுகளிலும் மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள பட்ஜெட்டிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை
மாநகரில் விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை ரூ.490 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தவுள்ளதாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இப்போது மீண்டும் அத்திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலதாமதத்தால் இத்திட்டத்துக்கான மதிப்பீடு தற்போது ரூ. 630 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வாகனங்கள் நிறுத்துமிடம்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குதல் திட்டத்தில், பல்நிலை அடுக்கு கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.20 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய பட்ஜெட்டில் இத் திட்ட மதிப்பீடு ரூ. 30.76 கோடியாக உயர்ந்திருக் கிறது.
குப்பையில் மின்சாரம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் நாள்தோறும் மாநகராட்சியில் சேகரமாகும் 178 டன் திடக்கழிவுகளை ராமையன்பட்டியில் 118 ஏக்கர் நிலத்தில் கொட்டி வருகிறார்கள். இங்கு குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் கடந்த 23.9.2014-ம் தேதி தொடங்கியதாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதன் நிலை குறித்த தகவல்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை.
அழகான நயினார்குளம்?
திருநெல்வேலி நயினார்குளத்தை அழகுபடுத்தும் திட்டம் குறித்து ஆண்டு தோறும் பட்ஜெட்டில் சொல்லப்படுகிறது. இவ்வாண்டும் அது தவறாமல் இடம்பிடித் திருக்கிறது. படகு குழாம் புதுப்பித்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை, 10 கடைகள், அலங்கார நீரூற்று, அலங்கார மின்விளக்கு அமைப்பு உள்ளிட்டவை ரூ.1.50 கோடியில் செயல்படுப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு மீண்டும் மீண்டும் பழைய விஷயங்களையே சொல்லி பட்ஜெட்டு களை மாநகராட்சியில் தாக்கல் செய்து வருகிறார்கள். தொலைநோக்கு சிந்தனை யுன் திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பதும், அறிவித்த திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டுவதும், பொதுமக்களுக்கு உண்மையிலேயே தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல் விடுவதும் திருநெல்வேலி மாநகராட்சியின் வளர்ச்சியில் பின்னடவை ஏற்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT