Published : 14 Mar 2014 05:17 PM
Last Updated : 14 Mar 2014 05:17 PM

தேமுதிகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டார்.

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இதுவரை நடந்த பேச்சுவார்த்தையின்படி, தமது கட்சிக்கு உறுதி செய்யப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கிறார்.

தேமுதிகவின் முதல் பட்டியலில் 5 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

நாமக்கல் - மகேஷ்வரன் (மாணவரணி முன்னாள் துணைச் செயலர்)

மதுரை - சிவமுத்துக்குமார் (மதுரை மாநகர் மாவட்டச் செயலர்)

திருவள்ளூர் (தனி) - வி.யுவராஜ் (வடசென்னை மாவட்டச் செயலர்)

திருச்சி - ஏ.எம்.ஜி.விஜயகுமார் (மாணவரணி செயலர்)

வடசென்னை - சவுந்திரபாண்டியன் (தொழிற்சங்க பேரவைச் செயலர்)

முன்னதாக, பாஜக அணியில் தேமுதிக-வுக்கு 14, பாஜக-வுக்கு 8, பாமக-வுக்கு 9, மதிமுக-வுக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் உதிரிக் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்தெந்த தொகுதி, யார் யாருக்கு என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

இதுதொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாமகவும் கேட்பதால் சிக்கல் நீடிக்கிறது.

விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆரணி, அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகளை பெறுவதில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பாஜக அணியில் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x