Published : 21 Feb 2014 09:55 AM
Last Updated : 21 Feb 2014 09:55 AM
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அது போகப் போகத் தெரியும் என்று அதிமுக-வில் சேர்ந்த தேமுதிக முன்னாள் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
தேமுதிக தொடங்கிய சிறிது காலத்திலேயே அக்கட்சியில் சேர்ந்து கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு ஆலோசகராகவும், கட்சியின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பல துறைகளில் அமைச்சர் பொறுப்பையும் வகித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தேமுதிகவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி அவர் வெளியேறினார். அதோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அப்போது, அவர் அதிமுக-வில் சேரக்கூடும் என்று பேச்சு நிலவியது. ஆனால், அரசியலில் இருந்து விலகப்போவதாக அவர் அறிவித்தார். அதன்பிறகு, அவருக்கு அறிஞர் அண்ணா விருதினை தமிழக அரசு, கடந்த மாதம் வழங்கியது. இந்நிலையில், அதிமுக-வில் திடீரென அவர் வியாழக்கிழமை சேர்ந்தார். போயஸ் கார்டனில் முதல்வரை, தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இது பற்றி அவர் “தி இந்து”-வுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது:
தேமுதிக-வில் இருந்து வெளியேறியதும், அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தீர்களே?
அரசியலில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவித்தது உண்மைதான். முதல்வர், அறிஞர் அண்ணா விருதினை எனக்கு அளிப்பதாக அறிவித்தார். அதற்கு என்னால் ஆன நன்றியினை காட்டும் வகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் ஆசை ஏற்பட்டது.
அதன் அடிப்படையில், அண்ணா விருதினை பெற்றபோது முதல்வரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அதை ஏற்று அவர் நன்றி தெரிவித்தார். அந்த அடிப்படையில் உடலுழைப்புக்கு அதிக அவசியம் இல்லாமல், அதிமுக-வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்ற விருப்பத்தில் அதிமுக-வில் சேர்ந்துள்ளேன்.
தேர்தலில் எம்.பி.சீட் கிடைத்தால் போட்டியிடுவீர்களா?
அதிமுக-வில் அனைத்துப் பொறுப்புகளுக்கும் தலைமை வகிக்கும் கமாண்டர் இன் சீஃப் ஆன புரட்சித் தலைவி,
வரும் தேர்தலில் கட்சி வெற்றி பெற நான் எத்தகைய பணி மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதை ஏற்று செயல்படுவேன். நான் கட்சியில் எந்த எதிர்பார்ப்போடும் சேரவில்லை.
உங்கள் மகனுக்கு எம்.எல்.ஏ.சீட் தரப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதே?
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே எனது குடும்பத்தாரை ஜெயலலிதா நன்கு அறிவார். அதனால்தான் எனது மகன், மனைவி ஆகியோரோடு கட்சியில் சேர்ந்தேன்.
தேமுதிக-வில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணம் என்ன?
நான் அங்கே இருந்தால் அவர்களுக்கும் பயனில்லை. எனக்கும் நன்மை இல்லை. நான் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை. அவர்களாக எந்த நல்ல முடிவையும் எடுக்கவில்லை. தேமுதிக கட்சியின் (விஜயகாந்தின்) வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
தேமுதி வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்கிறீர்கள். அவர்களுடன் கூட்டணி சேர சிலர் ஆளாய் பறக்கிறார்களே?
அந்த கட்சியின் வீழ்ச்சி, தொடங்கிவிட்டது. அதைப் போகப் போகப் பார்ப்பீர்கள்.இவ்வாறு பேட்டி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT