Published : 19 May 2017 04:04 PM
Last Updated : 19 May 2017 04:04 PM
வேலூர் மாவட்ட ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் அருகே 2 டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது.
அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 178 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதில், ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் போராட்டம் வலுத்து வருகிறது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யக் கூடாது, மூடப்பட்ட கடைகளை திறக்கவும் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் மதுபானக் கடைகளை (கடை எண்: 11033, 11327) மூடக்கோரி பொதுமக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேல்பட்டி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையேற்காத பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடைக்கு முன்பாக போடப்பட்டிருந்த மேற்கூரையை பிரித்தெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை நடுரோட்டில் தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபாட்டில்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட ராஜக்கல், அழிஞ்சிகுப்பம், சங்கராபுரம் கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் வேனில் ஏற்றினர்.
இதனால், ஆவேசடைந்த பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீஸார் அராஜக போக்கை கையாள்கின்றனர் எனக்கூறி போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலீஸ் வேனில் ஏற மறுத்த பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
உடனே, பேரணாம்பட்டு வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டாட்சியர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மேல்பட்டி - பச்சக்குப்பம் பிரதான சாலையில் இயங்கி வரும் 2
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, டாஸ்மாக் கடைக்கு எதிராக சிலர் 'பாடை கட்டி' போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் வந்த அரசு வாகனம் (ஜீப்) மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில், ஜீப் கண்ணாடிகள் உடைந்தது. அதேநேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் வாகனங்கள் மீதும் சிலர் கல்வீச்சி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் போலீஸார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான டாஸ்மாக் மதுபாட்டில்களை நடுரோட்டில வீசி ஏராளமானோர் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. உடனே, போலீஸார் வேறு வழியின்றி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அழிஞ்சிகுப்பம், சங்கராபுரம் மற்றும் ராஜக்கல் கிராமங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து 2 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது. அழிஞ்சிகுப்பம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT