Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

மணமகனுக்குத் தாலி கட்டிய மணமகள்- துப்புரவுத் தொழிலாளி இல்லத் திருமணத்தில் நடந்த புதுமை

சமூகத்தைத் தலைகீழாக மாற்ற வேண்டும் என புரட்சிகர மாற்றங்களை முன்மொழியும் பலரும்கூட பேச்சோடு நின்றுவிடும் நிலையில், இவற்றையெல்லாம் பற்றி இவர்கள் என்ன பெரிதாக நினைத்துவிடப் போகிறார்கள் என ஏளனமாகப் பார்க்கப்படும் துப்புரவுத் தொழிலாளர் தம்பதி, ஆணுக்குப் பெண் சமம் என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர், தங்கள் மகளின் திருமண நிகழ்வின் மூலம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாறு லைன்கரை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் தம்பதி சோமு, கல்யாணி. இவர்களின் மகள் வசந்தி. இவருக்கும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த பழனிநாயக்கன், திலகவதி தம்பதியின் மகன் சதீஷுக்கும் நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

மணமகளின் பெற்றோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சீர்திருத்த முறைப்படி நடைபெற்ற இந்த மணவிழா நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். முதலில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், வழக்கம்போல் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இதையடுத்து மணமகன் கழுத்தில் மணமகள் வசந்தியும் தாலி கட்டினார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றோர், வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ந்துபோயினர். ஆணும் பெண்ணும் சமம் என்பதை விளக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக குடும்பத்தினர் விளக்கிய பின்னரே, நடந்ததை உணர்ந்த பார்வையாளர்கள் அந்தக் குடும்பத்தினரைப் பாராட்டி வியந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x