Published : 21 Feb 2014 07:00 PM
Last Updated : 21 Feb 2014 07:00 PM
மதுரை மாநகரில் நிலவும் வறட்சியை சமாளிக்க செயற்கை மழை வரவழைப்பது பற்றி யோசித்து வருவதாக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியின் கூட்டம் மேயர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார். இதில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் லாரிகள் மூலம் நீர் விநியோகிக்க ரூ.2.69 கோடி, 500 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.13.87 கோடியை பொது நிதியிலிருந்து செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுபோல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் செல்லம் பேசுகையில், தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. மேட்டு பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மேயர் பதிலளித்து பேசுகையில், ’99 சதவீதம் பகுதிகளுக்கு வேகமான குடிநீர் வழங்கப்படுகிறது. மேடான பகுதி அமைந்துள்ள 1 சதவீதம் பேருக்கும் போதுமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அதிமுக கவுன்சிலர் கேசவ பாண்டியம்மாள் பேசுகையில், ‘மழை இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனமாக இருந்து மழைக்காக வேண்டுதல் செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஏற்பாடாக இதற்கு மேயர் அனுமதி தர வேண்டும்’ என்றார்.
இதைக்கேட்ட மேயர் அதிர்ச்சியடைந்து ‘அதையெல்லாம் வெளில வைச்சுக்கலாம். இங்க வழிபாடு நடத்தக்கூடாது’ எனக் கூறி அனுமதி மறுத்தார். அதன்பின்னரும் கேசவபாண்டியம்மாள் விடாப்பிடியாக கேட்டதால், ‘மார்ச், ஏப்ரலில் மழை வந்து விடும். நம்பிக்கையோடு அமருங்கள்’ எனக்கூறி மேயர் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார்.
கவுன்சிலர் தாஸ் பேசுகையில், மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது சிரமமாக உள்ளது. கர்நாடகாவில் ரூ.1000 கோடி செலவு செய்து மழைக்காக யாகம் நடத்தியுள்ளனர். அதுபோல் நாமும் மழைக்காக யாகம் வளர்க்க வேண்டும்’ என்றார். அதற்கு பதிலளித்த மேயர் ‘யாகம் என்பது தனிப்பட்ட நம்பிக்கை. அதை மாநகராட்சியால் செய்ய முடியாது. அதற்கு பதில் வறட்சியை சமாளிக்க செயற்கை மழை வரவழைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.
கிரண்குராலா இருளா?
சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி உள்பட பல கவுன்சிலர்கள் பேசும்போது இதற்கு முன் ஆணையராக இருந்த கிரண்குராலாவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினர். அப்போது கிரண்குராலாவால் கடந்த 3 மாதமாக மாநகராட்சியே இருண்டு கிடந்ததாகவும், புதிய ஆணையராக வந்துள்ள சி.கதிரவனால் இனி இருளிலிருந்து மீண்டு ஒளிகிடைக்கப் போவதாகவும் அனைவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான கருத்தையே பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT