Last Updated : 24 Sep, 2016 09:03 AM

 

Published : 24 Sep 2016 09:03 AM
Last Updated : 24 Sep 2016 09:03 AM

கட்சி மாறும் வாரிசுகளால் விருதுநகரில் தொடரும் பரபரப்பு

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் காலம் முதல் விருது நகருக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி சரிந்ததும், திராவிடக் கட்சிகள் விருதுநகரை தக்க வைத்துக் கொண்டன. கடந்த 1977-ல் அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

திருவில்லிபுத்தூரில் 1963-ல் எம்.ஜி.ஆர். மன்றம் தொடங்கியவர் தாமரைக்கனி. 1977-ல் அதிமுக தொடங்கப்பட்டபோது கட்சியில் சேர்ந்து களப்பணியாற்றியவர். 1977-ல் திருவில்லிபுத்தூர் தொகுதி யில் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றார்.

1987-ல் எம்.ஜி.ஆர். இறந்த பிறகு 1989-ல் அதிமுக இரண்டாகப் பிரிந்த போது ஜானகி அணிக்கு சாதகமாகப் பணியாற்றினார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இருந்தபோது 1991-ல் திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட் டது. இதனால் அவர் சுயேச்சையா கப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1996-ல் அதிமுக சார்பில் திருவில்லிபுத்தூரில் தாமரைக்கனி மீண்டும் போட்டியிட்டார்.

அப்போது தமிழகத்திலேயே அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 4 பேரில் இவரும் ஒருவர். பின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி ராமசாமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை யடுத்து ஏற்பட்ட பிரச்சினையில், தாமரைக்கனி ஒதுக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார்.

ஆனால் அவரது மகன் இன்பத் தமிழனின் முயற்சியால் மீண்டும் அதிமுகவில் பிரவேசித்தார் தாமரைக்கனி. இருப்பினும் 2001-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர் தலில் திருவில்லிபுத்தூர் தொகுதி யில் அதிமுக சார்பில் போட்டியிட இன்பத்தமிழனுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த தாமரைக்கனி மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார். அதில் இன்பத் தமிழன் வெற்றி பெற்றார்.

மனம் வெறுத்த தாமரைக்கனி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு, அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட்டு நகர்மன்றத் தலைவரானார். இன்பத்தமிழனுக்கு அமைச்சர் பதவியும், மாவட்டச் செயலர் பொறுப்பும் கிடைத்தது. தாமரைக் கனி 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இறந்தார். அதன் பிறகு இன்பத்தமிழனை அதிமுக கைவிட்டது. இதனால் மனம் வெறுத்த அவர் 2006-ல் திமுகவுக் குச் சென்றார். சில மாதங்களில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந் தார். அவரை இன்றுவரை கட்சி உறுப்பினராக மட்டுமே வைத்து அழகு பார்த்து வருகிறது அதிமுக.

இதேபோல் அதிமுகவில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத் தில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். கருத்து வேறுபாடு காரணமாக 1999-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலராகப் பொறுப்பு வகித்து வந்த சாத்தூர் ராமச்சந்திரன் மாவட்ட திமுகவை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

அதையடுத்து திமுக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதில் பல பிரச்சி னைகள் எழுந்தன. இந்நிலையில், சாத்தூர் ராமச்சந்திரனுக்குப் பக்க பலமாக செயல்பட்ட அவரது மகன் ரமேஷ் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். தாமரைக்கனி- இன்பத்தமிழனைத் தொடர்ந்து சாத்தூர் ராமச்சந்திரன் - ரமேஷ் எதிரெதிர் அரசியல் களத்தில் சந்திக்க உள்ளனர். இது விருதுநகர் மாவட்ட அரசியலில் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதுகுறித்து சாத்தூர் ராமச்சந் திரனிடம் கேட்டபோது, “தற்போது அரசியல் சூழ்நிலை சரியில்லை. இதனால்தான் எதுவுமே கூற விரும்ப வில்லை’’ என்றார். முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனிடம் கேட்டபோது, “கட்சியில் தற்போது வெறும் தொண்டனாகத்தான் இருக் கிறேன். நான் கட்சிக்குள் வந்தபோது தலைமை என்னை ஊக்குவித்தது. ரமேஷ் எதற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியாது’’ என்றார்.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரோடு கை கோர்த்து தந்தைக்கு எதிராகக் களப் பணியாற்றத் தொடங்கியுள்ள ரமேஷ் கூறியதாவது:

இது தந்தையை எதிர்த்து அரசியல் என்பதில்லை. இதில், அரசியல் வியூகம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தலைமை அனுமதித்தால் மட் டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஒன்றரை ஆண்டுகளாக சிறுசிறு மோதல் கள் நடந்தன. திமுகவில் உள்ள சில சுயநலவாதிகளை எதிர்த்துப் போராடினேன். என்னைக் கழுத் தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்கள். 8 மாதங்களாக எங்கு செல்வது எனத் தெரியா மல் இருந்தேன். அப்போது ‘நான் இருக்கேன்’ என்று அணைத்துக் கொண்டது அதிமுகதான்.

பணம், ஜாதி ரீதியாக எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்க முடியாது. நான் நாகரிகமாக அரசியல் செய்வேன். திமுக என்ன வியூகம் போட்டாலும் இங்கு செல்லுபடியாகாது என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் எதிரெதிர் அணியில் தந்தை, மகன் நடத்தும் அரசியல் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x