தி.மு.க. உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் மீது தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் பி.தனபால் வெளியிட்ட அறிவிப்பு:
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் 'அவை உரிமை மீறல்' பிரச்சினை குறித்து ஓர் அறிவிப்பு கொடுத்துள்ளார்.
அதில் 25–10–2013, 28–10–2013 ஆகிய நாட்களில் அவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உண்மைக்குப் புறம்பாக தி.மு.க. உறுப்பினர்கள் வெளியில் சென்று பேட்டி அளித்தது, அவை உரிமை மீறல் செயலாக இருப்பக்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
மேலும், அந்த அறிவிப்பில், "கேவலம், பஸ் கண்டக்டர்" என்று, தான் கூறாத வார்த்தையை கூறியதாக உண்மைக்கு மாறாக பேட்டி அளித்ததுடன், உறுப்பினர்கள் பேரவையில் உரையாற்ற வாய்ப்பு அளிக்கும் பேரவைத்தலைவரின் தனிப்பட்ட உரிமையை உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்தும் வகையிலும், அவைக்கு ஒவ்வாத சொற்கள் பயன்படுத்தப்படவில்லை என்று ஏற்கனவே பேரவைத்தலைவர் தீர்ப்பு அளித்த பிறகு, அதனை கேள்வி கேட்கும் வகையிலும், தி.மு.க. உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பேட்டி அளித்து இருப்பது சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது உரிமையையும், பேரவைத்தலைவர் உரிமையையும் ஒட்டுமொத்தமாக இப்பேரவையின் உரிமையையும் மீறிய செயலாக உள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் மேலெழுந்தவாரியாக, உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், இதுகுறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226–ன் கீழ் உரிமைக்குழுவுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சபாநாயகர் பி.தனபால் தெரிவித்தார்.
WRITE A COMMENT