Published : 16 Mar 2014 03:20 PM
Last Updated : 16 Mar 2014 03:20 PM

தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி: ஜி.கே.மணி அறிவிப்பு

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, பாமக இடையே தொகுதிகளை பங்கிடுவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது. இந்நிலையில் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகளும், பாமகவுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக கேட்கும் ஒரு சில தொகுதிகளை, பாமகவும் கேட்பதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்நிலையில் 5 தொகுதிகளுக்கான தேமுதிகவின் முதல் வேட்பாளர் பட்டியலை இரு தினங்களுக்கு முன் விஜயகாந்த் வெளியிட்டார். அதோடு தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இன்று மாலை தருமபுரியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது.

பாமக தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணியில் ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாமகவின் அன்புமணி ராமதாஸ் 11-வது வேட்பாளர். பாஜக உடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

தருமபுரி தொகுதி பாமகவுக்கு என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதனால், கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்துவிட்டு தான், அங்கு அன்புமணி ராமதாஸை வேட்பாளராக நிறுத்துகிறோம். பாஜக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதி என்பதையும், பாமக வேட்பாளர் பட்டியலையும் இன்னும் ஓரிரு நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்

முதல் முறையாக போட்டி

அரசியலுக்கு வந்த நாள் முதல், அன்புமணி ராமதாஸ் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டது இல்லை. கடந்த 2004-ம் ஆண்டு திமுக உதவியுடன் மாநிலங்களவை எம்பியான அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். முதல் முறையாக தற்போது, தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

யாருக்கு எந்தெந்த தொகுதி?

தேமுதிக 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என பாஜக கூட்டணி முடிவாகியுள்ளது. யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகிவிட்டாலும் அந்த பட்டியலை பாஜக மேலிடம் முறைப்படி விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

தேமுதிக:

திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், மதுரை, நெல்லை.

பாஜக:

கன்னியாகுமரி, கோவை, தென்சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரும்புதூர், தஞ்சாவூர்

பாமக:

தருமபுரி, அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர்

மதிமுக:

விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தேனி, கரூர், காஞ்சிபுரம், ஈரோடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

திருப்பூர்

இந்திய ஜனநாயக கட்சி:

பெரம்பலூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x