Published : 25 Apr 2017 08:10 AM
Last Updated : 25 Apr 2017 08:10 AM

தமிழக அமைச்சர்கள் 8 பேரின் வரவு - செலவு பட்டியலுடன் காத்திருக்கும் பாஜக

அதிமுக அணிகள் இணைப்பு விவகாரத் தில் நடந்து கொண்டிருக்கும் ஆடுபுலி ஆட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வராது போலிருக்கிறது.

அதிமுகவின் இணைப்பு பேச்சுவார்த் தைக்கு 2 அணிகளும் குழுக்களை அமைத்துவிட்டன. ஆனால், இன்னும் நேரடியான பேச்சுவார்த்தைகள் தொடங்க வில்லை. அமைச்சர் பதவியில் விட்டுக்கொடுத்துப் போனாலும் கட்சிப் பதவியை கைப்பற்றுவதில் உறுதியுடன் இருக்கிறார் ஓபிஎஸ். மேலும், இவ்வளவு தூரம் எதிர்த்த பிறகு இனி சசிகலாவையோ அவரது குடும்பத்தினரையோ கட்சிக்குள் வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது என்பதையும் ஓபிஎஸ் உணர்ந் திருக்கிறார்.

எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி சசிகலா தரப்பை அதிமுகவில் இருந்து ஒரேயடியாக ஒதுக்கிவிட துடிக்கிறார். மத்திய பாஜக அரசின் துணையோடு அதை சாதித்துவிட முடியும் என்பது அவரது கணக்கு.

ஆனால், சசிகலா தரப்பு வேறு மாதிரி யாக கணக்குப் போடுகிறது. தினகரனுக்கு எதிராக காய்நகர்த்தும் திவாகரன் தரப்பு, தங்களது விசுவாசிகளான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களை வைத்து ரகசிய கூட்டங்களை நடத்தி தினகரனை ஓரங்கட்டிவிட்டது. ஆனால், ஆட்சியே போனாலும் சசிகலாதான் பொதுச்செயலாளர் பதவியில் தொடர வேண்டும் என்பது இவர்களது விருப்பம்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் 4 பேர் வெளிப்படையாக பேசியுள்ளனர். ‘‘கட்சியையும் ஆட்சி யையும் யார் வேண்டுமானாலும் வைத் திருக்கட்டும். ஆனால், பொதுச்செயலாளர் பதவியில் சசிகலாவே நீடிக்க வேண் டும்’’ என்று அவர்கள் அழுத்தம் கொடுத் துள்ளனர். தினகரனை ஒதுக்கிவிட்டு திவாகரனிடம் கட்சி அதிகாரத்தை ஒப் படைக்க சூழ்ச்சி நடப்பதாக சந்தேகிக்கும் ஓபிஎஸ் அணியினர், ‘இந்த திட்டம் இருப்பதால்தான் 17 எம்எல்ஏக்களுடன் ரகசியமாக பேசி இருக்கிறார் திவாகரன்’ என்கின்றனர்.

இதனிடையே, ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் 5 பேரிடம், கட்சியை ஒற்றுமையாக கொண்டு செல்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசி இருக்கிறார். என்றாலும், தங்களது நிபந்தனைகளுக்கு எடப்பாடி அணி நிச்சயம் இறங்கிவரும் என்று ஓபிஎஸ் அணி திடமாக நம்புவதற்கு காரணமே மத்திய அரசுதான்.

ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இணைப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். ஓபிஎஸ் முக்கிய இடத்தில் இருந்தால் அது குடியரசுத் தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கிறது பாஜக. அதற்காகவே அவருக்கு ஊக்கம் கொடுக்கிறார்கள்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான வருமான வரி சோதனை நடவடிக்கையின் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் ‘கிலி’ வைத்தியம் கொடுத்திருக்கும் மத்திய அரசு, இன்னும் 8 அமைச்சர்களின் வரவு - செலவு பட்டியலுடன் அடுத்த ஆபரேஷனை தயாராய் வைத்திருக்கிறது.

இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரிந்து போனதால்தான் தினகரனையே ஒதுக்கத் துணிந்தார்கள் அமைச்சர்கள். இணைப்பு நடவடிக்கையில் தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கினாலோ காலம் கடத்தினாலோ இன்னும் சில அமைச்சர்கள் வருமான வரித் துறையால் வளைக்கப்படுவார்கள். இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் சலனப்படாமல் தெம்பாக இருக்கிறார் ஓபிஎஸ்.

அதிமுக அணிகளை இணைப்பது தொடர்பாக ஒருசில அமைச்சர்கள் மட்டுமே கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கிறார்கள். இது மாவட்டச் செய லாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. ‘‘அணிகள் இணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும். ஆனால், அமைச்சர்கள் மட்டும்தான் கட்சி என்பதுபோல நீங்களே கூடிப்பேசி முடிவுகளை எடுக்கிறீர்கள். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை’’ என்று எடப்பாடி பழனிசாமியிடமே சில மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x