Published : 17 Nov 2013 12:02 PM
Last Updated : 17 Nov 2013 12:02 PM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஏரியில் கடந்த 1992ம் ஆண்டு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. 250 ஏக்கர் ஏரியில், ஆறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, 3,700 மனைகள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டன. இந்த மனைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது, இந்தக் குடியிருப்பில் ஆறாயிரம் வீடுகள் உள்ளன. இதில், 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்குடியிருப்பில் மேல்நிலைத் தொட்டி, சமூக நலக் கூடம், வணிக வளாகம், மருத்துவ மனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. அத்துடன் அப்படியே விடப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கும் வரவில்லை, முறையாகப் பராமரிக்கவும் இல்லை. இதனால், இக்கட்டிடங்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
குடியிருப்பின் பின் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக 32 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், அந்த இடம் புதர்மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் நூலகம், தபால் நிலையத்துக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட துறையினருக்கு இந்த இடங்கள் வழங்கப்படவில்லை.
பாழடைந்த கட்டிடங்கள் குடிகாரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டது. மது பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போட்டுவிட்டுச் செல்வதால் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். புதர் பகுதி என்பதால் பாம்பு, தேள் போன்றவை அழையா விருந்தாளியாக வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் முறையிட்டும் பலனில்லை என்றார், வீட்டுவசதி வாரிய மனை உரிமையாளர்கள் சங்கத் துணைச் செயலாளர் ஜனார்த்தனம்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒதுக்கப்படாதது குறித்து, சமூக ஆர்வலர் தரணிதரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டார். அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் கிரயம் செய்து (பணம் கொடுத்து) வாங்க வேண்டும் என்பது வீட்டுவசதி வாரியத்தின் விதிமுறை என பதில் வந்தது.
இதுகுறித்து, தரணிதரன் கூறுகையில், “மக்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைப் பணம் கொடுத்துத்தான் வாங்கச் சொல்வது நியாயமல்ல’’ என்றார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கட்டிடங்களைச் சம்பந்த பட்ட துறைகளிடம் வாங்கிக் கொள்ளப் பலமுறை அறிவுறுத்தியும், இதுவரை அந்தத் துறைகள் வாங்க முன்வரவில்லை. கூடிய விரைவில் இப்பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்பட்டு, அந்த இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்’’ என்றார்.
நகராட்சிக்குக் குத்தகை விடப்படுமா?
பயன்படுத்தாமல் சேதம் அடைந்த வணிக வளாகம், மருத்துவமனை, சமூகநலக் கூடம் உள்ளிட்ட கட்டிடங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் எடுத்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஆவடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment