Published : 12 Mar 2017 03:51 PM
Last Updated : 12 Mar 2017 03:51 PM
அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் வசந்தகுமாரி. அடுத்த மாதம் ஓய்வு பெறும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி வழங்கப்படாமல் ஊதியமின்றி தவிக்கிறார்.
கடந்த 1993-ம் ஆண்டு, மார்ச் 30-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து, பணி ஆணை பெற்று, அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியைத் தொடங்கினார் வசந்த குமாரி. பணியில் சேர்ந்ததுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் நகரப் பேருந்தை ஓட்டி, ஆண் ஓட்டுநர்களை ஆச்சர்யப்பட வைத்தவர். தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி தடத்திலும், பின்னர் தூத்துக்குடி தடத்திலும், அதன் பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தடத்திலும் பணிபுரிந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக பணி கிடைக்காமல், ஊதியம் இன்றி தவிக்கிறார்.
இது குறித்து வசந்தகுமாரி கூறும்போது, ``தொடக்கத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்த போதே, ஒரு பெண் ஓட்டுநராக முடியுமா எனக்கூறி அதிகாரிகள் நிராகரித்தனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தேன். அவரிடம் இருந்தே பணி ஆணையைப் பெற்றேன். நான்கு முறை அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். முதல் பெண் ஓட்டுநர் என்பதால் என்னை நன்றாக நினைவில் வைத்து, உரிமையோடு பெயர் சொல்லி அழைப்பார்.
இரவும், பகலுமாக பேருந்தை ஓட்டியதில் முதுகுவலி, சர்க்கரை நோய், கழுத்து வலி, ரத்த அழுத்தம் என பெரும்பாலான நோய்கள் வந்தன. இனி பேருந்து ஓட்ட முடியாது என்பதால், பணிமனையில் பணி ஒதுக்கக் கேட்டேன். மூன்று ஆண்டுகளாக பணி ஒதுக்கவில்லை. என் பணிக்காலத்தில் விபத்து ஏற்படுத் தியதில்லை. உடல் சுகவீனம் அடைந்த ஆயிரக்கணக்கானோர் மாற்றுப் பணியில் உள்ளனர். ஆனால், எனக்கு இதுவரை பணி ஒதுக்கவில்லை.
மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் பணி வழங்கவில்லை. பணிக்காலத்தில் நான் அனுபவித்த இன்னல்களை சுயசரிதையாக எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார் அவர்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் திருவம்பலம் கூறும்போது, ``உடல்நிலையை மருத்துவக் குழு மூலம் பரிசோதித்து, அவரால் கடினமான வேலை செய்ய முடியாது என்னும் உடல் தகுதிச்சான்று பெற்று வர அறிவுறுத்தினோம்.
ஆனால், அவர் செல்லவில்லை. மருத்துவச் சான்று வழங்கினால் மாற்றுப் பணி வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT