Last Updated : 08 Apr, 2015 08:58 AM

 

Published : 08 Apr 2015 08:58 AM
Last Updated : 08 Apr 2015 08:58 AM

தற்கொலைக்குத் தூண்டியது யார்? - அரசு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் வாக்குமூலம்

‘தற்கொலை முடிவை தூண்டியது யார்’ என்பது குறித்து திருச்சி அரசு மருத்துவமனையின் முன்னாள் ஆர்எம்ஓ-வும், மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியருமான நேரு பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து 2 மாதங்களுக்கு முன் மாற்றலாகி, திருச்சி அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ-வாக பொறுப்பேற்றுக் கொண்டவர் நேரு. அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்தபோது தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து நலமுடன் நேற்று வீடு திரும்பினார். அவர் ஆர்எம்ஓ பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு நேற்று முதல் ஒரு மாதத்துக்கு விடுப்பு எடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ‘தி இந்து’ நிருபரிடம் நேரு கூறியதாவது: “மந்திரி சொல்கிறவர்களுக்கு மட்டும் வைத்தியம் பாருன்னா, எவன்தான் வேலை செய்வான், மற்ற நோயாளி களையெல்லாம் யார் பார்ப்பது? ஒரு நாளைக்கு அதுமாதிரி கேஸே 40, 50 வருது. அவங்க வரும் முன்பே போன் வருது.

எனக்கு இன்னும் டிஸ்சார்ஜ் சம்மரி தரவில்லை. கேட்டா ஈசிஜி அப்படிங்றாங்க! அப்புறம் வாங்கிக்கோங்க என்று சொல்றாங்க. எனக்கு இந்த அளவுக்கு பிரஷர் (அழுத்தம்) கொடுக்க காரணம் லோக்கல் ஹெல்த் மினிஸ்டர்தான். இவருடைய கேஸ்தான் அதிகம் வருது. பூனாட்சி, பரஞ்ஜோதி போன்ற மற்றவங்களெல்லாம் ரொம்ப கம்மி.

கடந்த 1993 முதல் நான் இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கிறேன். இடையில தஞ்சாவூர் போயிட்டு வந்திருக்கேன் அவ்வுளவுதான். நான் திரும்ப வந்தவுடன் என்னை ஆர்எம்ஓ வேலை பார்க்கச் சொன்னாங்க. ஆனா அத நான் விரும்பல. நான் படிச்சது எம்டி. நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை பார்க்கவேண்டிய நான், எதுக்காக பேப்பர் பேனா பிடிச்சு அட்மினிஸ்ட்ரேட்டிவ் வேலை செய்யணும்.

இந்த ஆஸ்பத்திரியில் ஒவ் வொருத்தரும் பதவியைப் பிடிக்க பணம் கொடுத்துருக்காங்க.

தற்கொலை முடிவுக்கான காரணம்

இந்த ஆர்எம்ஓ போஸ்டிங் ஒரு மாசம்-ன்னு சொன்னாங்க. அப்புறம் ஆறு மாசம் பாக்கணும்னு சொன்னதும் என்னால தாங்க முடியல. ஒருமாசமே இவங்க டார்ச்சர் தாங்க முடியலே. நமக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ஒரு பயத்தில இத செஞ்சேன்.

எனக்கு அப்பாயிண்டிங் அத்தாரிட்டி கவர்னர். டீன் எனக்கு சுப்பீரீயர் அவ்வுளவுதான். அவர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கவர்னர் நினைத்தால் என் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த லெவல்ல இருக்குற என்னையே வாட்டி எடுத்தா மத்தவன் என்ன பாடுபடுவான்.

அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் நல்லது. மருத்துவமனை யின் தரத்தை உயர்த்தனும். டாக் டருங்க ஒழுங்கா சீட்ல இருக்காங் களான்னு கண்காணிக்கணும்” என்றார்.

‘அமைச்சர் தரப்பில் எந்த அழுத்தமும் தரவில்லை’

சென்னை

சுகாதாரத் துறை அமைச்சர் அலுவலக வட்டாரத்தில் கூறியதாவது:

பொதுவாக பெரிய விபத்து அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில், அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த மருத்துவமனை டீன் அல்லது முதல்வரிடம் மட்டுமே பேசுவோம். நேரடியாக அமைச்சர் யாரிடமும் பேசுவதில்லை. அதுபோல, நிலைய மருத்துவ அதிகாரியிடம் (ஆர்எம்ஓ) யாரும் பேசுவதில்லை.

மருத்துவம் என்பது சேவைத் துறை. இத்துறையில் செய்யும் வேலையை சுமையாக கருதக்கூடாது. இன்றுகூட, விபத்தில் சிக்கிய 2 பேரை அமைச்சர் காப்பாற்றி அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற வழிசெய்யப்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற திருச்சி ஆர்எம்ஓ நேருவுக்கு அமைச்சர் தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அவர் யார் என்றே தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளியில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x