Published : 10 Mar 2017 12:02 PM
Last Updated : 10 Mar 2017 12:02 PM
மதுரையில் ஒரு கல் குவாரி ரூ.21 கோடிக்கு ஏலம் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை ஏமாற்ற ஏலதாரர்களின் மறைமுக திட்டத்தை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் 29 கல் குவாரிகளுக்கான பொது ஏலம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, முத்திரைத்தாள் பிரிவு துணை ஆட்சியர் லில்லிபாய், கனிமவளத் துறை துணை இயக்குநர் சிற்றரசு உட்பட அதிகாரிகள் பலர் முன்னிலையில் ஏலம் தொடங்கியது. 4 குவாரிகளின் ஏலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் கைவிடப்பட்டது. மீதமுள்ள 25 குவாரிகளில் வாடிப்பட்டி அருகேயுள்ள டி.மேட்டுப்பட்டி குவாரிக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. மற்ற குவாரிகளுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகைக்கும் மேல் யாரும் ஏலம் கேட்காததால் ரத்து செய்யப்பட்டது. டி.மேட்டுப்பட்டி குவாரிக்கு மட்டும் ஏலம் தொடங்கியது.
ஆதிமுத்தன் என்பவர் ரூ.2,05,55,000-க்கு கேட்டு ஏலத்தை தொடங்கினார். சில வினாடிகளிலேயே சுந்தர்பாபு என்பவர் ரூ.20 கோடி என்றார். திடீரென 10 மடங்குவரை ஏலத்தொகையை உயர்த்திக் கேட்டதால், ஏலத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். தொகையை உறுதிப்படுத்த சுந்தர்பாபுவிடம் அதிகாரிகள் மீண்டும் கேட்டனர். ரூ.20 கோடிக்கு எடுக்கத் தயார் என சுந்தர்பாபு தெரிவித்தார். இதை பதிவு செய்து அவரிடம் கையெழுத்து பெற்றனர்.
ஏல அரங்கில் சிறிது நேரம் மவுனம் நிலவிய நிலையில், அழகுப்பாண்டி என்பவர் ரூ.21.01 கோடிக்கு கேட்டதும் மீண்டும் பரபரப்பு தொற்றியது. பின்னர் ரவி ரூ.21.05 கோடிக்கு கேட்டார். திருப்பாலையைச் சேர்ந்த சதீஷ்குமார் ரூ.21,05,50,000-க்கு கேட்டார். இதன் பின்னர் யாரும் கேட்காததால், சதீஷ்குமாருக்கே ஏலம் முடிவானது.
அதிகாரிகளை ஏமாற்ற ஏலதாரர்கள் சூழ்ச்சி
இது குறித்து ஏலத்தில் பங்கேற்ற ஒருவர் கூறியதாவது: கடந்தமுறை இதே குவாரி ரூ.2 கோடிக்கு ஏலம் போனது. தற்போது 10 ஆண்டு கால குத்தகை என்றாலும், ரூ.5 கோடிக்கு போவதே பெரிய விஷயம் எனக் கருதினோம். ஆனால் ரூ.21 கோடிக்கும் அதிகமாக போனதை நம்பவே முடியவில்லை. தமிழகத்திலேயே கல்குவாரி இவ்வளவு தொகைக்கு இதுவரை ஏலம் போனதில்லை. மேலும் மற்ற குவாரிகளை குறைந்தபட்ச தொகைக்குக்கூட கேட்காதவர்கள், இந்த குவாரியை மட்டும் இவ்வளவு அதிகத் தொகைக்கு கேட்டதில் காரணம் உள்ளது. அதிகாரிகளை ஏமாற்ற, ஏலதாரர்கள் மறைமுகமாக சூழ்ச்சி செய்தது அம்பலமாகியுள்ளது.
பொதுவாக உயர்ந்தபட்ச தொகைக்கு ஏலம் கேட்டவர் உரிய பணத்தை செலுத்த தவறினால், அடுத்த நிலையில் கேட்டவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவரும் செலுத்த தவறினால், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவருக்கு வாய்ப்பு கிடைக்கும். 2 பேரும் செலுத்தாவிடில் ஏலம் ரத்து செய்யப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தவே, மிக உயந்த பட்சமாக ரூ.20 கோடிக்கு கேட்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் யாரும் கேட்க மாட்டார்கள் எனக்கருதியே இந்தளவிற்கு கேட்கப்பட்டுள்ளது. இதை அறிந்த போட்டியாளர்கள், அடுத் தடுத்து கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டு தொகையை வீம்புக்காக உயர்த்திவிட்டனர். இவ்வளவு உயர்ந்த தொகையை யாரும் செலுத்த வாய்ப்பே இல்லை.
அப்படியொரு நிலை வரும்போது குறைந்தபட்ச தொகை கேட்டவருக்கு ஏல உரிமை வழங்குவதை தடுக்கவே இந்தளவிற்கு அடுத்தடுத்து ஏலத்தொகையை உயர்த்தியுள்ளனர். இதனால் இந்த குவாரியின் ஏலம் ரத்தாகவே வாய்ப்பு அதிகம். எனினும் ஆட்சியரின் முடிவே இறுதியானது. சட்டப்படி முடிவெடுக்க ஆட்சியரிடமும் கோரிக்கை விடப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT