Published : 10 May 2017 11:53 AM
Last Updated : 10 May 2017 11:53 AM

பயணிகளைக் கவரும் ‘பூச்சமரத்தூர் காட்டேஜ்’ சுற்றுலா: இயற்கைச் சூழல், விலங்குகளை ரசிக்கும் பொதுமக்கள்

பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் பரிசல் பயணம் மூலம் இயற்கைச் சூழலையும், வன விலங்குகளையும் பார்வையிடும் பரவசத்தை சுற்றுலாப் பயணிகளுக்குத் தருகிறது பரளிக்காடு சுற்றுலா.

கோவை காரமடை வனத் துறை சார்பில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பரிசல் பயணத்தில், மதியம் பழங்குடியினர் உணவான ராகி களி, கம்பங்கூழ், மீன் குழம்பு, சுண்டல், சுக்கு காபி என உடலுக்கு கேடில்லாத உணவுகளை அளிக்கிறார்கள். அடர்ந்த காட்டில் ஆலமர விழுதுகளில் அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள், கயிற்றுக் கட்டில்கள், பாய் விரிப்புகள் என சகலமும் ரூ.450-க்கு இந்த சுற்றுலாவில் கிடைக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சூழல் சுற்றுலா நடைபெறும் நிலையில், தற்போது புதிதாக ‘பூச்சமரத்தூர் காட்டேஜ்’ என்ற சூழல் சுற்றுலாவை வனத் துறையினர் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பரளிக்காடு நீர்தேக்கப் பகுதிக்கு அருகில் உள்ள பூச்சமரத்தூர் பழங்குடியினர் கிராமம், காரமடையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வனத் துறைக்குச் சொந்தமான பகுதியில் 3 மர வீடுகள் (காட்டேஜ்) பச்சை வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 15 அடி உயரத்தில் கான்கிரீட் தூண் அமைத்து, அதற்கு மேல் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு காட்டேஜில் 8 பேர் வீதம் 3 காட்டேஜ்களில் மொத்தம் 24 பேர் தங்கலாம். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காலை 10.30 மணிக்கு காய்கறி சூப் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 4 வனவர்கள், 8 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட குழுவினர், மலைப் பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.


கோவை மாவட்டம் பூச்சமரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காட்டேஜ்கள்.

பில்லூர் அணையின் பின்புறத்தில் அமைந்திருப்பதால், காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகளையும், பல வகையான பறவைகளையும் காணமுடிகிறது. சில நேரங்களில் சிறுத்தைகளையும், அதிர்ஷ்டமிருந்தால் புலிகளைக்கூட பார்க்கலாம்.

மலையேற்றம் முடிந்து திரும்பியவுடன் சைவம், அசைவ உணவு வழங்கப்படுகிறது. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் பரிசல் பயணம் அழைத்துச் செல்கின்றனர். அதிலும், இயற்கைக் காட்சிகள், விலங்குகளைக் காணலாம். தொடர்ந்து, பழங்குடியின மக்களின் விளையாட்டில் பங்கேற்கலாம். தொடர்ந்து, அத்திக்கடவு பகுதிக்கு குளிப்பதற்காக அழைத்துச் சென்ற பின்னர், மீண்டும் காட்டேஜ்களுக்குத் திரும்பலாம்.

இரவில் சுவையான உணவுக்குப் பின்னர் உறங்கும்போது, விலங்குகளின் சப்தத்தைக் கேட்கலாம். சாளரம் வழியே பார்த்தால், சில மிருகங்கள் உலவுவதையும் பார்க்கலாம். அடுத்தநாள் காலை 9.30 மணிக்கு விடுதியை விட்டுப் புறப்படலாம்.

காரமடையிலிருந்து சொந்த வாகனத்தில் அல்லது வனத் துறையினரின் வாகனத்தில் பூச்சமரத்தூருக்குச் செல்லலாம். இந்த சுற்றுலாவுக்கு ரூ.1,500 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது: பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் அங்கமாகத்தான் இதை உருவாக்கினோம். பொதுவாக பரம்பிக்குளம், ஆழியாறு, டாப் சிலிப், வால்பாறை போன்ற பகுதிகளில் வனத் துறை, பொதுப்பணித் துறையினரின் தங்கும் விடுதிகள் உள்ளன. மர காட்டேஜ்கள்கூட உண்டு. அவற்றில் விஐபிக்கள் தங்காதபோது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடைக்கும். அப்படி தங்குவோர், அவர்களாகவே அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து, சுற்றிப்பார்க்க செல்வார்கள். அவர்களாகவே சிலரை வழிகாட்டியாக (கைடு) வைத்துக் கொள்வார்கள். எனினும், அவர்களால் வன விலங்குகள் வாழும் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் அதிகம் செல்ல முடியாது.

அவ்வாறின்றி, பரந்த வனப் பகுதிக்குள், நீர் நிரம்பிய பில்லூர் அணை உள்ள பகுதியில், வன விலங்குகள் அதிகம் நடமாடும் இடங்களில் வனத் துறையே ஏற்பாடு செய்துள்ள சூழல் சுற்றுலா இதுதான். வன விலங்குகள், குறிப்பாக யானைகள் வந்தாலும், அவற்றால் சேதப்படுத்த முடியாத வகையில் 15 அடி உயர தூண்கள் அமைத்து, இந்தக் குடில்களைக் கட்டியுள்ளோம். இந்த சுற்றுலாவின் மூலம் மக்கள் இயற்கைச் சூழலை மகிழ்ச்சியாக கண்டுகளிப்பதுடன், வன விலங்குகள், காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதற்கேற்ப இந்தச் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளோம் என்றனர்.

இவற்றைக் கட்டி நீண்ட நாட்களாகியும், அரசியல் கோஷ்டி பூசலால் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், யாருக்கும் சங்கடமின்றி கடந்த சித்திரை 1-ம் தேதி வனத் துறை அதிகாரிகளே இந்த காட்டேஜ் சுற்றுலாவை தொடங்கிவைத்துள்ளனர். இந்த காட்டேஜ்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பதிவு செய்வோரில் பெரும்பாலானோர் இதையும் பதிவு செய்து விடுகின்றனர். விளம்பரம் இல்லாமலே பூச்சமரத்தூர் காட்டேஜ் சுற்றுலா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x