Last Updated : 07 Feb, 2014 12:00 AM

 

Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

நெல்லையில் சமூக விரோதிகளின் புகலிடமான மடங்கள்; அழியும் கலாச்சாரச் சின்னங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில், மன்னர் காலத்தில் பொதுநோக்குடன் அமைக்கப்பட்ட வழியோர மடங்கள் சிதிலமடைந்தும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகின்றன. நமது கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமான இந்த மடங்களை பாதுகாக்க யாரும் முன்வரவில்லை.

போக்குவரத்து தேவைக்கு, மோட்டார் வாகனங்கள் வழக்கத்துக்கு வரும் முன், நம் முன்னோர்கள் கால்நடையாக ஊர்விட்டு ஊர் சென்று வந்தனர். புனித யாத்திரைகள, திருவிழா கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது, பண்ட பாத்திரங்களுடனும், கால்நடைகளுடனும் பல நாள்கள் பயணம் செய்திருக்கிறார்கள். நெடுந்தூரம் நடந்தே தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தொலைத்திருக்கிறார்கள்.

ஓய்வுக்கு உதவிய மடங்கள்

நெடும் பயணம் மேற்கொள்ளும் போது, ஆங்காங்கே தங்கி இளைப்பாறவும், இரவில் உறங்கிவிட்டு எழுந்து செல்லவும் வசதியாக வழியோரங்களில் கல் மடங்களை உருவாக்கியிருந்தனர். பிரசித்தி பெற்ற கோயில்களில் பிரமிக்க வைக்கும் கல் தூண்களைப்போல் இந்த மடங்களிலும், சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரவருணி நதிக்கரையோரங்களிலும், பிரதான சாலையோரங்களிலும் அத்தகைய மடங்கள் தற் போதும் காட்சியளிக்கின்றன. இந்த மடங்களுக்குள் பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் குளிர்ச்சியை உணரமுடியும். நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருந்த இந்த மடங்கள், இப்போது பயன்பாடு இல்லாமலும், பராமரிக்கப்படாலும் விடப்பட்டிருக்கின்றன.

கல் மண்டபத்தின் மேற்பகுதி களில் மரங்கள் வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றன. உள்ளே குப்பை கிடங்காக காட்சியளி க்கிறது. ஒருசில மடங்களை தவிர மற்றவை அனைத்தும் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுவதை உணர்த்தும் வகையில் மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன.

கழிப்பிடமான அவலம்

கழிப்பிடமாகவும் மடங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. முக்கியச் சாலையோ ரங்களில் இருக்கும் மடங்களில் வர்ணங்களை பூசி கட்சி விளம்பரங்களும், வர்த்தக விளம்பரங்களும் எழுதப்பட்டி ருக்கின்றன. மாவட்டத்தில் சாலை கள் விரிவாக்கத்தின்போது, வழியோர மடங்கள் பலவும் இடித்து அகற்றப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் மடங்க ளும் பராமரிப்பின்றி விடப்பட்டிருக்கின் றன. பல மடங்கள் ஆக்கிரமிப்பாளர் களின் பிடியில் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தகைய மடங்களை புனரமைக் கவும், பாதுகாக்கவும் இந்திய தேசியக் கலை கலாசாரப் பாதுகாப்பு அறக்கட்டளை (இன்டாக்) முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இந்த முயற்சியால் பல மடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தப்பி, பாதுகாக்கப்படுகிறது. அத் தகைய முயற்சியை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மேற்கொண் டால் இந்த மடங்கள் பாதுகாக்கப் படும் வாய்ப்புள்ளது.

80-க்கும் மேல்

இது தொடர்பாக, ‘இன்டாக்’ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.எஸ்.லால்மோகனிடம் பேசினோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 80-க்கும் மேற்பட்ட வழியோர மடங்கள் இருப்பதாக கணக்கிட்டி ருக்கிறோம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதைவிட அதிகமாக மடங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 1759-ம் ஆண்டுக்குப்பின் கார்த் திகை திருநாள் மகராஜா காலத் தில் இத்தகைய மடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ராணிமங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் இத்தகைய மடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் இந்த மடங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். இதுகுறித்து, அரசிடம் கோரிக்கை வைத்தால் நிதியில்லை என்றுகூறி தட்டிக்கழிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வழியோர மடங்கள் குறித்தும், ‘இன்டாக்’ சார்பில் கணக்கிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x