Published : 21 Jan 2014 08:43 AM
Last Updated : 21 Jan 2014 08:43 AM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலையா?- ராமதாஸ் புகாருக்கு கருணாநிதி கண்டனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தூண்டி விடுவதுதான் எங்கள் வேலையா? என ராமதாஸுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய, இலங்கை மீனவர் சந்திப்பு தாமதம் ஆவதற்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருக்கிறார். ஒன்றரை ஆண்டு காலம் மத்திய அரசு முயற்சித்ததாகவும், தமிழக அரசுதான் காலம் தாழ்த்தியது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்க்க வருவோருக்கு அனுமதி வழங்காமல், புறக்கணிப்பதாகச் செய்தி வந்துள்ளது. சுற்றுலாத் துறையைக் கண்டித்து, மாவட்ட திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

திமுக தூண்டுதலின் பேரில் பாமகவினரை விடுதலைச் சிறுத்தைகள் தாக்குவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளைத் தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலையா? வேறொருவரைத் தூண்டிவிட்டு, தாக்குதல் நடத்தும் படி சொல்லும் புத்தி திமுகவுக்கு என்றைக்கும் கிடை யாது. அதிமுக ஆட்சியில் பாமகவினர் மீது வழக்குகள் போடப்பட்டபோது, அதைக் கண்டித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

1992-ம் ஆண்டில் பாமக வன்முறை இயக்கம் என மத்திய அரசுக்கு அதிமுக அரசு கடிதம் எழுதியபோது, அதை எதிர்த்தவன் நான். ஆனால், வன்முறை திமுகவுக்கு கை வந்த கலை என்கிறார் ராமதாஸ். சில பேருக்கு நாக்குதான் விரோதி.

அண்மைக் காலத்தில் நீதிபதிகள் குறித்தும், அவர்கள் நியமனம் குறித்தும் வெளிவரும் செய்திகள் மனவேதனை தருகின்றன. உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீதே குற்றம் சாட்டப்படுகிறது. நீதிமன்றத்தில் வாதாடிப் பழக்கமே இல்லாதவர்கள் பெயர் எல்லாம் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நியமனத்துக்கு முன்பே இப்படிப்பட்ட புகார்கள் எழும் நிலையில், நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பின் வரும் விளைவுகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டுமல்லவா? உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே, தற்போது செய்யப்பட்டுள்ள நியமனம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். குற்றச் சாட்டுகள் கூறப்படும் காரணத் தால், நீதித்துறையின் மீது களங்கம் ஏற்பட்டு விடும். ‘மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது’ என்று தேவர் திருமகன் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.

சிதம்பரம் கோயிலுக்குள் நீதியும் நுழைய முடியாதா என்ற தலைப்பில், தீக்கதிர் தலையங்கம் எழுதியுள்ளது. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. தோழமைக் கட்சியின் இந்த வேண்டுகோளையாவது, அதிமுக அரசு ஏற்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x