Published : 15 Oct 2013 10:08 PM
Last Updated : 15 Oct 2013 10:08 PM
சென்னையில் ஆட்டோ மீட்டர்களை, புதிய கட்டண விகிதத்துக்கு ஏற்ப திருத்தி அமைப்பதற்கான காலக்கெடுவை போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை வரை மேலும் இரு நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
சென்னையில் ஆட்டோ மீட்டர் கட்டணம், கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய கட்டண விகிதத்துக்கான அட்டையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆனால், பல ஆட்டோக்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டண அட்டைகளை வாங்காத நிலையே இருந்து வந்தது. சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத 2,600 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, ஆட்டோ மீட்டர்களை திருத்தி அமைக்க கெடு விதிக்கப்பட்டிருந்த இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை 66,632 ஆட்டோக்களின் உரிமையாளர்கள் மட்டுமே கட்டண அட்டைகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் வெறும் 26,500 பேர் மட்டுமே மீட்டர்களை திருத்தி அமைத்து, அதற்கான முத்திரையை மீட்டர்களில் பெற்றுள்ளனர். இதன்படி இன்னும் சுமார் 50 ஆயிரம் ஆட்டோக்களின் மீட்டர்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றும், சென்னையில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே மீட்டர் மெக்கானிக் கடைகள் இருப்பதை கருத்தில் கொண்டும் மேலும் இரண்டு நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT