Published : 19 Mar 2014 10:10 AM
Last Updated : 19 Mar 2014 10:10 AM
பிளஸ் 2 மாணவி கொலைவழக்கில் மறைக்கப்பட்ட மேலும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. கொன்று விடாதே என்று கொலைகாரனின் காலில் விழுந்து கெஞ்சிய மாணவியை, தாயின் கண் முன்பாகவே கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பதாகவும், நிலத்தகராறும் இதன் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மணலி புதுநகரில் வசிப்பவர் இன்பராஜ்(41). இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). இவர்களது மகள் அனுபாரதி (17). மகன் பாலா(13). இவர்களின் சொந்தஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள திருவழுதிவிளை கிராமம். அதே கிராமத்தில் இன்பராஜின் எதிர் வீட்டில் வசிப்பவர் கருவேலமுத்து. இவரது மகன் ஜெயராமன் (23). கருவேலமுத்துவும் இன்பராஜும் உறவினர்கள். இன்பராஜுக்கு வீட்டுடன் சேர்ந்து 5 சென்ட் நிலமும் உள்ளது. கருவேலமுத்துவுக்கு வீடு மட்டுமே உள்ளது. இந்நிலையில் குழந்தைகளாக இருந்த ஜெயராமன், அனுபாரதி இருவரும் வளர்ந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று இருவரது பெற்றோரும் பேசியுள்ளனர். இந்நிலையில் தொழில் விஷயமாக இன்பராஜ் குடும்பத்துடன் சென்னை வந்து செட்டிலாகிவிட்டார். கருவேலமுத்து தூத்துக் குடியிலேயே வசித்தார். கருவேல முத்துவின் மற்றொரு மகன் சென்னையில் படிக்க, அவரைப் பார்க்க வரும் போதெல்லாம் இன்பராஜின் வீட்டுக்கு ஜெயராமன் சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டை பெரிதாக கட்ட நினைத்த கருவேலமுத்து, “அனுபாரதியை எனது மகனுக்குத்தானே திருமணம் செய்து வைக்கப்போகிறாய், அதற்கு வரதட்சணையாக இந்த நிலத்தை கொடுத்து விடு” என்று கேட்டிருக்கிறார். அதற்கு இன்பராஜ் மறுப்பு தெரிவிக்க பிரச்சினை தொடங்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்பராஜின் வீட்டுக்கு வந்த ஜெயராமன் மீண்டும் பெண் கேட்டு தகராறு செய்திருக்கிறார். ஜெயராமன் வீட்டுக்கு வெளியே நிற்க, நண்பரை பார்த்து வருவதாக கூறி வெளியே சென்றிருக்கிறார் இன்பராஜ். மகன் பாலாவை டியூசன் செல்லுமாறு பக்கத்து வீட்டுக்கு அனுப்பிய கிருஷ்ணவேணி, புளி வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் அனுபாரதி மட்டும் இருக்க திடீரென வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார் ஜெயராமன். தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த அனுபாரதி யிடம், தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்த அவர் மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஜெயராமன் பையில் வைத்திருந்த கத்தியை வைத்து அனுபாரதிைய மிரட்ட, அவர் அபயக்குரல் எழுப்பியுள்ளார். ‘என்னைக் கொன்று விடாதே’ என்று ஜெயராமனின் காலில் விழுந்து கும்பிட்டிருக்கிறார். அவரது சத்தத்தைக்கேட்டு தாய் கிருஷ்ணவேனி ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அனுபாரதியை தரையில் படுக்க வைத்து அவரது கழுத்தை அறுத்திருக்கிறார் ஜெயராமன். இதைப் பார்த்து கிருஷ்ணவேனி கதறியிருக்கிறார்.
அனுபாரதியை கொன்ற பிறகு வெளியே வந்த ஜெயராமன், கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் கிரிக்கெட் மட்டையால் அவரை அடித்துப் பிடித்திருக்கின்றனர். ஆனால் இந்த தகவல்களை போலீஸார் மறைத்துள்ளனர்.
திங்கள் கிழமை அனுபாரதியின் வீட்டுக்கு வந்த ஒரு நபர், ‘நான் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் இருந்து வருகிறேன். அனுபாரதியின் தாய், தந்தை இருவரும் இந்த பேப்பரில் கையெழுத்து போடுங்கள்’ என்று வெற்று பேப்பரை நீட்டியிருக்கிறார். அவரை உறவினர்கள் அடிக்க வர, போலீஸார் அவரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT