Published : 24 Jun 2016 08:18 AM
Last Updated : 24 Jun 2016 08:18 AM
தமிழகத்தில் பின்தங்கிய சுமார் 3,000 மாணவர்களை தத்து எடுத்து அவர்களின் அடிப்படைக் கல்வியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா வாழ் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை.
அமெரிக்கா வாழ் தமிழர்களில் 4 குடும்பங்கள் கைகோர்த்து 1974-ல் அமெரிக்காவில் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’யை உருவாக்கினார்கள். தொடக்கத்தில் இதன் அங்கத்தினர்கள் தங்களுக்குள் நிதி திரட்டி தமிழகத்தில் தங்களது சொந்த ஊரில் ஏழைகளின் படிப்பு, பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு உதவினார்கள். இதைத் தொடர்ந்து 1984-ல் சென்னையிலும் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ தொடங்கப்பட்டது. அமெரிக்க தமிழர்களால் அனுப்பப்படும் நிதியானது இதன் வழியாக உரிய திட்டங்களுக்குச் செலவிடப்பட்டது.
இப்போது, அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளையில் சுமார் 800 பேர் ஆயுட்கால உறுப்பினர்கள். இவர்கள் மூலம் அனுப்பப்படும் நிதியைக் கொண்டு கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட தளங்களில் கைமாறு கருதாத சேவையை ஓசையின்றி செய்து கொண்டிருக்கிறது சென்னை தமிழ்நாடு அறக்கட்டளை.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அறக்கட்டளையின் செயல் இயக்குநர் வசுமதி பென்னி, “40 ஆண்டுகளாக அறக்கட்டளை செயல்பட்டாலும் கடந்த 6 ஆண்டுகளாகத்தான் முறைப்படுத்தப்பட்ட வழியில் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
பின்தங்கிய பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெயரைக்கூட சரிவர எழுதத் தெரியாத நிலையில் 9-ம் வகுப்பு வரை வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் எங்களின் இலக்கு. கடந்த 6 ஆண்டுகளில் நாகை, திருவாரூர், நாமக்கல், சிவகங்கை, கடலூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் கல்வியில் பின் தங்கிய சுமார் 3,000 மாணவர்களை தத்தெடுத்திருக்கிறோம்.
இதன்படி மாவட்டத்துக்கு 5 முதல் 6 பள்ளிகள் வீதம் 39 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே தனிப்பயிற்சி கொடுக்கிறோம். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனி ஆசிரியர்களை நாங்கள் பணியமர்த்தி இருக்கிறோம். மாணவர்களை தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் மேம்படுத்துவதுதான் இவர்களது பணி. நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 6 பள்ளிகளுக்கு எங்களது சேவையை விரிவுபடுத்த இருக்கிறோம்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய வசுமதி, “10 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு தேர்வுகளை எதிர் கொள்வது குறித்த தன்னம்பிக்கை பயிற்சி, பள்ளிகளுக்கான அடிப் படை கட்டுமானங்கள் போன்ற வற்றை ஏற்படுத்தி தந்திருக்கிறோம். சீர்காழியில் ‘அன்பாலயம்’ என்ற மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகள் இல்லத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி ரூ.60 லட்சம் செலவில் கட்டிடங்களைக் கட்டித் தந்திருக்கிறோம்
அமெரிக்கா வாழ் தமிழர்களின் குழந்தைகள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு வரும்போது, அவர்களை இங்குள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று மாணவர்களோடு கலந்துரையாட வைக்கிறோம். இதன் மூலம் இரு தரப்புக் குழந்தைகளும் தங்களது கல்வி முறையையும் கலாச்சாரத்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கித் தருகிறோம்’’ என்று சொன்னார்.
வெள்ள பாதிப்புகளின் போது நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கும் தமிழ்நாடு அறக்கட்டளை, வெள்ளத்தால் சேதமடைந்த சென்னை அசோக்நகர் நூலகத்தை ரூ.30 லட்சம் செலவில் புதுப்பித்துக் கொண்டிருப்பது கூடுதல் தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT