Published : 18 Oct 2014 11:17 AM
Last Updated : 18 Oct 2014 11:17 AM
இந்தக் குழந்தைகளுக்கு யாரையும் ஏமாற்றத் தெரியாது. யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். யாரையும் பழிவாங்கும் எண்ணம் இருக்காது.. ‘பெத்சான்’ சிறப்புப் பள்ளியின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி இப்படி விவரிக்கிறார் ஜெயபால்.
மதுரையில் 1996-ம் ஆண்டில் ஜெயபால், ரவிக்குமார் என்ற இரட்டையர் சேர்ந்து உருவாக்கியது தான் ‘பெத்சான்’ பள்ளி. இளங்கலை முடித்த இருவரும் கூடுதல் தகுதிக்காக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வியியலை படித்தனர். அதுதான் ‘பெத்சான்’ பள்ளி தொடங்க காரணம் என்று சொல்லும் ஜெயபால், தனது அனுபவத்தை விவரிக்கிறார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வியியலை எழுத்தில்படித்தபோது எங்களுக்குள் எந்த பாதிப்பும் இல்லை. ஆண்டின் இறுதியில் செய்முறை பயிற்சிக்காக அந்தக் குழந்தைகளை சந்தித்த போதுதான் எழுத்துக்கும் அவர்களது இயல்பான வாழ்க்கைக்கும் முற்றிலும் வித்தியாசம் இருப்பதை புரிந்துகொண்டோம்.
கள்ளம் கபடமற்ற சிரிப்பு, எதிர்பார்ப்பில்லாமல் பழகும் தன்மை, ஆயிரம் ரூபாய் நோட்டை யும் சாதாரண தாளையும் ஒரே மாதிரியாக பார்க்கும் யதார்த்தம். இவற்றையெல்லாம் அந்தக் குழந்தை களிடம் பார்த்தோம். அவர்களிடம் சில இயலாமைகள் இருந்தாலும் நம்மிடம் இல்லாத சிறப்பு குணங்கள் நிறைய உண்டு. இந்த தெய்வக் குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்பதற்காக ஆரம்பித்ததுதான் ‘பெத்சான்’ பள்ளி.
1996-ல் 12 பேரை மட்டும் வைத்து இந்தப் பள்ளியை ஆரம்பித்தோம். எங்களது லட்சியத்துக்காக, ஏற்றுமதி நிறுவனத்தில் கிடைத்த வேலையை நானும் விமானப்படையில் கிடைத்த வேலையை ரவிக்குமாரும் தைரிய மாக துறந்தோம். இப்போது ‘பெத்சான்’ பள்ளி 65 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அடிப் படைக் கல்வியோடு சேர்த்து வாழ்க்கைக் கல்வியையும் போதித்துக் கொண்டிருக்கிறது.
இங்குள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் தன்மைக்கு ஏற்ப தனித்தனியான பாடத் திட்டங்கள் உண்டு. என்னதான் இவர்கள் படித்தாலும் இவர்களின் எதிர் காலத்தைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். அதைப் போக்குவ தற்காக குழந்தைகளுக்கு தொழில் கல்வியை கற்றுக் கொடுக்கிறோம். இங்கு படித்த 10 குழந்தைகள் இப்போது தனியார் நிறுவனங்களில் பணி செய்கின்றனர்.
ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ப்பதற்கு முன்பு அங்கு இருப்பவர்களிடம் இவர்களை எப்படி எல்லாம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் இவர்களை எந்தச் சூழலிலும் உதாசீனப் படுத்தக் கூடாது என்றும் கவுன்சலிங் கொடுத்துவிடுவோம்.
வேலைக்கு அனுப்ப முடியாத குழந்தைகளின் பெற்றோருக்கு, ‘எங்கள் காலத்துக்கு பிறகு இவர் களை யார் கவனிப்பார்கள்’ என்ற கவலை இருக்கும். அதுபோன்ற குழந்தைகளின் உடன்பிறந்த உறவுகளை அழைத்து இந்தக் குழந்தை களை ஒதுக்காமல் எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கவுன்சலிங் கொடுக்கிறோம். வாழ்க்கைக் கல்வியின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளுக்கு சமையல் கற்றுக் தருகிறோம்.
இங்கு படிக்கும் குழந்தைகள் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். மற்ற மாநில அரசுகள், இதுபோன்ற குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும்போதே பரிசுகளை அறிவித்துவிடுகின்றன.
ஆனால், தமிழக அரசுக்கு எங்கள் குழந்தைகளை பாராட்டக்கூட மனமில்லை. வெளியில் வேலைக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்காக 5 ஏக்கரில் அனைத்து வசதிகளைக் கொண்ட மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்க தீர்மானித்திருக்கிறோம். அங்கு மல்பரி, பால் பண்ணை, கோழிப் பண்ணை அமைத்துக் கொடுத்து அந்தக் குழந்தைகளை சுயசார்புடையவர்களாக மாற்றுவது தான் எங்களது அடுத்த இலக்கு என்று தீர்க்கமாக பேசினார் ஜெயபால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT