Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM
மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர், அவரது மனைவி மற்றும் மகனை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கே.கே.நகர்அம்மன் கோயில் தெருவில் குரு கிளினிக் உள்ளது. இதை டாக்டர் இளங்கோவன், அவரது மகன் டாக்டர் குருபரத் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையுடன் சேர்ந்து அவர்களின் வீடும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 4.15 மணியளவில் இந்த மருத்துவமனைக்குள் 10 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்து டாக்டர்கள் இளங்கோவன், குருபரத் ஆகியோரை தாக்கினர்.
இதை தடுக்க முயன்ற இளங்கோவனின் மனைவி பார்வதியையும் அந்த கும்பல் தாக்கியது. மருத்துவமனையில் இருந்த நாற்காலிகள் மற்றும் பொருட்களையும் அடித்து உடைத்தனர்.
மருத்துவமனைக்கு வெளியே இருந்த இரண்டு கார்களின் கண்ணாடிகளையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் மதியழகன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை சேகரித்து போட்டு பார்த்தபோது, மீனாட்சி கல்வி குழுமங்களின் தலைவர் ராதாகிருஷ்ணனின் மகன் கோகுல் தலைமையில் வந்த கூலிப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட அறிவழகன், தினேஷ், கணேஷ்பிரபு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் கோகுலை தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் பற்றி டாக்டர் இளங்கோவன் கூறுகையில், “கையில் அடிபட்டிருக்கிறது, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இரண்டு பேர் வந்து காலிங் பெல்லை தொடர்ந்து அழுத்தினர். ஒருவர் கையில் வெள்ளை துணியால் கட்டும் போட்டிருந்தார். அவர்களை மருத்துவமனைக்குள் விட நர்ஸ் மறுத்த நிலையில் நான்தான் கதவை திறந்து உள்ளே விட்டேன். கதவை திறந்த மறு வினாடியே 10 பேர் உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்து விட்டனர்.
இதை தடுக்க வந்த எனது மகனை கொடூரமாக தாக்கினர். எனது மனைவியை பிடித்து தள்ளி விட்டனர். என்னையும், எனது மகனையும் முகம், கழுத்து, நெஞ்சு, மற்றும் வயிற்றில் தாக்கினர். இதில் எனது மகனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
அவர்கள் தாக்கியதில் நானும், எனது மகனும் இரண்டு முறை கீழே விழுந்து விட்டோம். சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டேன்லி மருத்துவ கல்லூரிகளில் டீனாக இருந்து ஓய்வு பெற்றவன் நான். எந்த காரணமும் இல்லாமல் எங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT