Published : 17 May 2017 02:15 PM
Last Updated : 17 May 2017 02:15 PM

கோவை வனப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் ஆண் யானைகள்: கணக்கெடுப்பு பணியில் முதற்கட்ட தகவல்

இன்று முதல் வனப்பகுதிகளில் தொடங்கியுள்ள ஒருங்கிணைந்த காட்டு யானைகள் கணக்கெடுப்பு பணிகளின் மூலம் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்தும், ஆண் யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.

தென்னிந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் வனச்சரகங்கள் வாரியாக இன்று முதல் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் காட்டு யானைகள் மிக அதிகமாக நடமாடும் கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட வனக்கோட்டங்களுக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் இன்று அதிகாலை முதலே ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

அந்த வகையில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிகள் தனித்தனி நேர்க்கோடுகளாக பிரிக்கப்பட்டு 32 குழுக்களாக 256 பேர் இக்கணக்கெடுப்பு பணியினைத் தொடங்கினர். ஒரு குழுவிற்கு 6 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 2 தன்னார்வலர்கள் என 8 பேர் இந்த யானை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா என ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் வனத்திற்குள் நுழைந்து ஆய்வில் ஈடுபடும் கள ஆய்வாளர்கள் தங்கள் கண்களில் தட்டுப்படும் யானைகளின் எண்ணிக்கையை கண்டு குறித்துக்கொண்டார்கள். நாளை 2 ஆம் நாளில் யானைகள் வழித்தடத்தில் காணப்படும் சாணம் மூலம் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். மற்றும் 3-ம் நாளில் வனத்தில் உள்ள நீர்நிலைகளில் அதன் வருகை மற்றும் காலடித்தடம் போன்றவற்றை கணக்கெடுப்பார்கள்.

இறுதியில் அறிவியல் ஆய்வின்படி ஆண் யானைகள், பெண் யானைகள், குட்டியானைகள் என பிரித்து இறுதி எண்ணிக்கை பற்றிய முடிவுகள் தயாரிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் இது போன்ற ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மூலம் இதன் எண்ணிக்கை கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா என தெரிய வரும். ஆனால் இம்முறை யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் இதில் ஆண் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதே முக்கியம் என்கின்றனர் வனத்துறையினர்.

(மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை அருகே வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள்)

அதை எப்படி முன்கூட்டியே சொல்ல முடிகிறது என்பது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ''முறையாக இப்படி யானைகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் வனத்திற்குள் ஒரு முறை வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அதன் எண்ணிக்கை, அதன் வழித்தடங்கள் குறித்த மாதிரி கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். அப்படி கண்ணில் காணப்படும் காட்டுயானைகள் குறித்து வைத்துக் கொள்ளப்படும். பிறகுதான் அந்த மாதிரியை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் ஊடுருவி இந்த ஆய்வு முழுமையாக நடத்தி நுட்பமான புள்ளி விவரங்கள் குறிக்கப்படும்.

அந்த வகையில் ஏற்கெனவே நடந்த மாதிரி ஆய்வில் 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. அதே சமயம் ஆண் யானைகள் எண்ணிக்கை அதற்கேற்ப சம பலத்தில் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே யானைகள் பெருக்கம் கூடி நிற்கும்போது அதற்கேற்ப விகிதத்தில் ஆண் யானைகள் எண்ணிக்கை உயராமல் இருப்பது வாடிக்கைதான்.

யானைகளுக்கான மோதல், எளிதில் நோய் தாக்கி இறப்பது, எதிரிகளால் வேட்டையாடப்படுவது இக்காரணங்களால் அதிகமான இறப்பை சந்திப்பது ஆண் யானைகள்தான். எனவேதான் இந்த முடிவை முன்கூட்டியே சொல்ல முடிகிறது. என்றாலும் முழுமையான முடிவை இந்த கணக்கெடுப்பு முடிந்த பின்னர்தான் தெரிவிக்க முடியும்!'' என்று தெரிவித்தார்.

நேற்று காலை மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முதல்கட்ட ஆய்வை ஒரு குழுவினர் செய்தனர். இவர்கள் கண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே அரசு வனத்துறை மரக்கிடங்குக்கு அருகிலேயே 4 யானைகள் கண்ணில் பட்டது. அதைத் தொடர்ந்து 7 யானைகள் கண்ணில் அகப்பட்டது. இவற்றையெல்லாம் குறித்துக் கொண்டு அடர் வனத்திற்குள் ஊடுருவியுள்ளனர் கணக்கெடுப்பாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x