Published : 17 Apr 2017 11:15 PM Last Updated : 17 Apr 2017 11:15 PM
ஓபிஎஸ் - எடப்பாடி அணிகள் இணைகிறதா? - அமைச்சர்கள் அவசர ஆலோசனை
அதிமுகவில் இருந்து பிளவுபட்ட இரு அணிகளும் மீண்டும் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை காலை முதலே இணைப்பு குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில், தற்போது அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் இல்லங்களில் மூத்த அமைச்சர்கள் பலர் கூடி ஆலோசித்து வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பி.க்களும் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டம் இயல்பான ஒன்றுதான் என செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஓபிஎஸ் - தம்பிதுரையின் சூசகம்
முன்னதாக, இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ''அதிமுக கட்சியில் எந்தப் பிளவும் இல்லை. தொகுதிப் பிரச்சினை குறித்துப் பேசவே முதல்வர் பழனிசாமியை சந்தித்தேன். அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். ஆட்சியைத் தக்கவைக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும். அதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை.
பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியினர் தாமாக முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். கருத்து வேறுபாடுகளை சரி செய்து ஆட்சியை தக்கவைப்பதே குறிக்கோள்" எனக் கூறியிருந்தார்.
WRITE A COMMENT