Published : 22 May 2017 08:46 AM
Last Updated : 22 May 2017 08:46 AM
பிற விபத்துகளைக் காட்டிலும் சாலை விபத்துகளில் தினமும் 382 பேர் உயிரிழந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. விபத்துகளைக் குறைக்க ஓட்டுநர்கள் தனிமனித ஒழுக்கத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பிற சம்பவங்களில் உயிரிழப்பவர் களைக் காட்டிலும் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1,35,445 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களில் 79,773 பேர் ஆண்கள், 40,755 பேர் பெண்கள். சராசரியாக ஒரு மணி நேரத்தில் 15 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதே நேரத்தில் சாலை விபத்துகளில் தினமும் 382 பேர் உயிரிழக்கின்றனர்.
இதற்கு வாகனம் ஓட்டுபவர்களிடையே ‘தனி மனித ஒழுக்கம்’ குறைந்து வருவதே பிரதான காரணம் என்கிறார் கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் நேற்று கூறிய தாவது:
பொதுவாக சாலையில் வாகனங்களில் செல்லும்போது எப்படி செல்ல வேண்டும் என்பதை விட, எப்படியெல்லாம் செல்லக் கூடாது என்பதை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சாலை விதிகள், சிக்னல்களை மதித்து நடப்பது, போக்குவரத்து சின்னங்களான எச்சரிக்கை, உத்தரவு, தகவல்களை புரிந்து அதன்படி செயல்படுவதால் விபத்து களை அதிகளவில் குறைக்க முடியும். அதற்கு நாம் எப்படி உடலை பராமரிக்கிறோமோ, அதேபோல் உயிரை சுமந்து செல்லும் வாகனங்களையும் பராமரிக்க வேண்டும்.
நான்கு வழி, ஆறு வழிச் சாலை, மாநிலம், மாவட்டம், கிராம சாலைகளில் பல்வேறு வகையான உத்திகளை ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டும். எல்லா சாலைகளிலும் ஒரே மாதிரியான வாகன இயக்கத்தை செயல் படுத்துவதும், விரும்பும் எல்லா நேரங்களிலும் வாகனங்களை இயக்குவதும் தவறான விளைவை ஏற்படுத்தும்.
சாலை குறியீடுகள், சாலை விதிகள், சிக்னல்கள், போக்குவரத்து காவலரின் சைகைகளை மதிக்காமல் நடந்து கொள்வது, சாலையில் செல்லும் வாகனங்களை இடதுபுறம் சென்று முந்துவது, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தி மற்ற வாகன ஓட்டி களுக்கு அச்சத்தை ஏற்படுத் துவது, சரக்கு வாகனங்களில் பயணிகளையும், பயணிகள் வாகனத்தில் சரக்குகளையும் ஏற்றிச் செல்வது.
அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வது, சுலபமாக வெடிக்கும் பொருட்களையும், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களையும் ஏற்றிச் செல்வது, போதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகம், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக் குவது போன்ற விதிமீறல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
பலர் 18 வயதுக்கு குறைவா னவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். மேலும் வாகனத்தில் பயணம் செய்யும் பிற பயணிகளிடம் பேசிக்கொண்டே கவனச் சிதறலுடன் பல ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டுகின்றனர். வாகனத்தின் கூரை, படிக்கட்டிலும் பயணிகளை பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
எப்போதும் வாகனங்களில் அந்த வாகனத்துக்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக பலர் ஆவணம் காலாவதியானது தெரியாமல் பழைய ஆவணங்களுடன் வாகனங்களை இயக்குகின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். சாலையில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களுக்கு உரிய சைகையை காண்பிக்காமல் திடீரென வளைவில் திரும்புவது, பாலங்களில் வாகனங்களை முந்திச் செல்து, ஓய்வின்றி வாகனங்களை இயக்குவது போன்றவற்றிலும் ஓட்டுநர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த விதி மீறல்கள் சம்பந்தப் பட்ட ஓட்டுநர்களிடம் தனி மனித ஒழுக்கம் இல்லாததை காட்டுகிறது. தனி மனித ஒழுக்க சீர்கேடுகளை களைந்து வாகனங்களை இயக்கினால் தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT