Published : 25 Mar 2017 12:13 PM
Last Updated : 25 Mar 2017 12:13 PM
குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நாகர்கோவில் நகர தேவைக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடல் அணைக்கு வழங்கப்படும் 50 கனஅடி தண்ணீரும் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளது. குடிநீரை விலைகொடுத்து வாங்கும் நிலை தொடங்கியுள்ளது.
நீர்நிலைகள் நிறைந்து செழிப்புடன் பசுமையாக காணப்படும் குமரி மாவட்டத்தின் நிலை நடப்பாண்டு நேர்மாறாக உள்ளது. தண்ணீரின்றி சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் விவசாய நிலங்கள், வனங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. மரங்களில் இலை உதிர்ந்து, கந்தக பூமிபோன்று மாறியுள்ளது. விவசாயத்தை நம்பியிருந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக அணைகள், நீர்நிலைகள், நீரேற்று நிலையங்களில் தண்ணீர் இல்லாததால் கிராம, நகரப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் தட்டுப்பாடு
கிராமப் பகுதிகளிலும் குளங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் ஊராட்சி அமைப்புகள் மூலம் தண்ணீர் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை கிராம ஊராட்சிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது வாரம் இருமுறை தண்ணீர் விநியோகம் செய்வதே சிரமமாக உள்ளது. இதனால் பொது குடிநீர் குழாய்களிலும், வீட்டு இணைப்புகளிலும் தண்ணீர் பெறமுடியாமல் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதிகாலையில் இருந்து மாலை வரையில் குடங்களை ஏந்தியவாறு மக்கள் அலைந்து திரியும் நிலையை, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள கிராமங்களில் காணமுடிகிறது.
தண்ணீர் விற்பனை
டெம்போ, லாரிகள் மூலம் கிணறுகளில் இருந்து பிடித்து வரப்படும் தண்ணீர் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு டெம்போ டேங்கில் ஏற்றப்படும் குடிநீர் ரூ. 1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் குடிநீரை விலைக்கு வாங்கும் பரிதாபம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரியை சேர்ந்த ஆறுமுகம் கூறும்போது, ``எனக்கு 50 வயதை தாண்டியுள்ளது. இதுபோன்று குடிநீருக்கு தட்டுப்பாடான நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் வறட்சி ஏற்பட்டபோது கூட விவசாய நிலங்கள் தான் பாதிக்கப்பட்டன. அப்போது கோடை மழை கைகொடுத்ததால் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டனர்.
குடம் குடிநீர் ரூ. 2
ஆனால், தற்போது பல கடற்கரை கிராமங்களில் குடிநீரை லாரிகளிலும், டெம்போக்களிலும் வரவழைத்து மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். கணக்கு பார்த்தால் ஒரு குடம் குடிநீர் 2 ரூபாய் என்ற விலை ஆகிவிடுகிறது. நிலத்தடி நீரும் இல்லாததால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இயற்கை விரைவில் கைகொடுத்தால் மட்டுமே தீர்வு ஏற்படும்” என்றார்.
பேச்சிப்பாறை பரிதாபம்
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``குமரி மாவட்டத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. பேச்சிப்பாறை அணையில் தற்போது 5.90 அடி தண்ணீர் உள்ள நிலையில், நாகர்கோவில் நகரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் முக்கடல் அணைக்கு வழங்கி வருகிறோம். அவ்வப்போது அணை பகுதிகளில் பெய்து வந்த கனமழை தற்போது நின்றுள்ளது. இதனால் உள்வரத்தும் குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் விரைவாக குறைந்துவிடும். அவ்வாறு நிகழ்ந்தால் தொடர்ந்து முக்கடலுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க முடியாமல் தடைபடும் ஆபத்தும் நிகழலாம்” என்றார். குடிநீருக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாடு குமரி மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT