Published : 15 Apr 2017 08:57 PM
Last Updated : 15 Apr 2017 08:57 PM

கோவையில் காட்டுக்குள் விடப்பட்ட குட்டி யானை ஜம்போ என்கிற அய்யாசாமி; திரும்பவும் சாலைக்கு வந்து அழிச்சாட்டியம்: என்ன செய்யப்போகிறது வனத்துறை?

வாயில் புண்ணுடன் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட குட்டியானை ஜம்போ என்கிற அய்யாசாமி நேற்று காட்டுக்குள் விடப்பட்ட பின்பும் ஊருக்குள் வந்து அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தது. எனவே இதை என்ன செய்வது என்று புரிபடாமல் உள்ளனர் வனத்துறையினர்.

கடந்த மாதம், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மாங்கரை பகுதியில் தாயுடன் சுற்றி வந்த ஆண் குட்டியானை வாயில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இயல்பாக உணவுகளை உட்கொள்ள முடியவில்லை. இதனால், பெரும் தவிப்புக்கு ஆளானது. மனிதர்களின் வசிப்பிடங்களில் புகுந்து மாவு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டது அதற்கு தனியக பழங்களில் புண்ணுக்கான மருந்து வைத்தால் அதை தாயும் மற்ற யானைகளும் உண்ணும் நிலை ஏற்பட்டது. எனவே இதை பிடித்து சிகிச்சையளிக்க முடிவு செய்தனர் வனத்துறையினர்.

அதற்கேற்ப அய்யாசாமி என்ற வனத்துறை அலுவலர் வீட்டிற்குள் புகுந்து மாவு, அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வனத்துறையினர் சுற்றி வளைத்து கும்கி பாரியின் உதவியோடு பிடித்தனர். மயக்க ஊசி போட்டு அங்கிருந்து லாரி மூலம் ஏற்றி வந்து சாடிவயல் முகாமில் சிகிச்சை அளித்து வந்தனர். அத்றகு முதலில் அய்யாசாமி என்றும் பிறகு ஜம்போ என்றும் வனத்துறை ஊழியர்களும் பாகன்களும் பெயரிட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தக்குட்டிக்கு ஒரு வயதுதான் இருக்கும் என்று பாகன்களும், 3 வயதுக்கு மேல் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகளும் முரண்பாடாக பேசி வந்த நிலையில் ஒரு வார காலத்தில் அதன் வாய்ப்புண் ஓரளவு சரியாகி விட்டது. ஆனால் அரிச்சாட்டியம் நிறைய செய்தது. 20 நாட்களுக்கு முன்பு வனத்துறை யானைகள் புத்துணர்ச்சி முகாமின் போது பழங்கள், உணவுகள் கொடுத்தபோது கூட துதிக்கையால் மண்ணை வாரி வீசியும், கால்களால் மண்ணைக்குழிபறித்தும், சீற்றம் காண்பித்தும் அனைவரையும் அச்சுறுத்தியது.

அதே சமயம் அதற்கு சரியாக உணவுகள் வழங்கப்படவில்லை. அதை கும்கியாக மாற்ற வனத்துறையினர் பட்டினிபோட்டு உள்ளனர். அதனாலேயே அது உணவுப்பொருளுக்கு ஏங்கி கோபத்தையும் வெளிப்படுத்துகிறது என்று சர்ச்சைகளையும் கிளப்பினர் வனஉயிரின ஆர்வலர்கள். ஆனால் வனத்துறை அதிகாரிகளோ, இதை கும்கியாக்கும் எண்ணம் துளி கூட இல்லை. இது முழுமையாக குணமான பின்பு கண்டிப்பாக காட்டில் விட்டு விடுவோம் என்று தெரிவித்து வந்தனர். என்றாலும் இது கும்கியாகுமா? காட்டில் விடப்படுமா என்ற சர்ச்சையே மேலோங்கி நின்றது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று இந்த குட்டி யானையை மீண்டும் காட்டுக்குள் விட்டுவிட முடிவெடுத்தனர் வனத்துறை அதிகாரிகள். அதன்படி நேற்று காலை சாடிவயல் முகாமில் இருந்து இந்த யானை லாரி மூலம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அத்திக்கடவு வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இப்பகுதி யானைகள் அதிகம் வாழும் அடர்ந்த வனப்பகுதி என்பதோடு இங்கு பவானியாறு ஓடுவதால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் இவ் வனப்பகுதி தேர்வு செய்து அதை காட்டுக்குள் விரட்டி விட்டனர். கூடவே அதற்கு தர்பூசணி பலாப்பழங்கள் எல்லாம் போடப்பட்டன. .

ஆனால் காட்டுக்குள் சென்ற யானை அங்கிருந்த மலையடிவார பள்ளத்தை கடந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் செல்லும் சாலைக்கு சுமார் அரை மணி நேரத்திலேயே வந்து விட்டது. சாலையில் நின்றுகொண்ட யானை அவ்வழியே சென்ற அரசு பேருந்தை மறுத்து நின்று கொண்டது. அதை அங்கிருந்து நகர்த்தவே முடியவில்லை. அத்தோடு சாலையில் குறுக்கும், மறுக்கும் நடந்தபடி இருந்த யானை இரு சக்கர வாகனத்தில் வருபவர்களை பார்த்து ஓடி வர, அவர்கள் வண்டியை திருப்பிக் கொண்டு வேகமெடுக்க ஒரே களேபாகாரமாகி விட்டது. அது சாலையின் ஓரமாக நிற்கும்போது சாலையை கடந்து சென்றவர்களை விரட்டவும் முயன்றது.

அது அவர்களை துரத்துகிறதா? வனத்துறை முகாமில் பாகன்களிடம் பழம், கரும்பு, களி, இலை தழைகள் வாங்கி சாப்பிட்டு பழக்கப்பட்டுபோனதன் பயனாய் வழிப்போக்கர்களிடமும் உணவு தருவார்கள் என்று ஓடி வருகிறதா என்று புரியாத புதிராய் இருந்தது. அங்குள்ள மனிதர்களின் எந்த ஒரு விரட்டுதலுக்கும் அது அஞ்சாமல் எதிர்த்தே வந்தது. இதனையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் யானையை மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.

ஆனால் அது அங்கேயே சுற்றுவதும், காட்டுக்குள் ஓடுவதும், இவர்களை நோக்கி வருவதும், திரும்ப விரட்டுவதும் என பூச்சாண்டி காட்டிக் கொண்டே நேற்று இரவு வரையிலும் இருந்தது.. யானை தற்போது சுற்றித்திரியும் பகுதியில் இருபதிற்கும் மேற்பட்ட மலையடிவார கிராமங்கள் உள்ள இடமாகும்.

‘இது ரொம்பவும் வயது குறைந்த குட்டியானை. தாயுடன் இருந்தபோது வீடுகளுக்குள், கடைகளுக்குள் புகுந்து கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, சர்க்கரை, உப்பு என தினசரி பதம் பார்த்து வந்ததும் கூட. தவிர இதன் தாய் ஒரு கடைக்கோ, வீட்டிற்கோ வந்தால் அது அந்த கட்டிடக்கதவுகளை உடைத்துக் கொடுக்கும். அதை உடைத்தவுடன் இந்த குட்டியானையைதான் அதனுள்ளே அனுப்பும், இது சென்று அங்கிருக்கும் உணவுப்பொருட்களை மூட்டையாக வெளியே தூக்கிக் கொண்டு வரும். இரண்டும் பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று சாப்பிடும். இப்படி நெடுநாட்களாக குடியிருப்புப்பகுதியில் பழக்கப்பட்டுப்போன காரணத்தால் இது திரும்பவும் குடியிருப்புகளை தேடியே அலைகிறது.

தவிர ஒரு மாதகாலமாக பாகன்கள் இருந்த இடத்தில் உணவு கொடுத்ததால் அதுபோலவும் தருவார்கள் என எதிர்பார்த்தே ரோட்டுக்கு வருகிறது. போதாக்குறைக்கு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. காட்டுக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் காட்டு யானைகள் பலவும் நலிவுற்று நோய்வாய்ப் பட்டுள்ளது. நிறைய இறந்தும் உள்ளது. அதையும் மீறி உயிர் வாழ்பவை தண்ணீர் தேடி ஊருக்குள்ளும் வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் இந்த யானைகளை வனத்துறையினர் பராமரிக்க வேண்டியது அவசியம்.

முதுமலை மசினக்குடி பகுதியில் ரிவோல்டா என்ற காட்டுயானை அப்படித்தான் மனிதர்கள் கொடுக்கும் உணவு வகைகளுக்கு பழகி சாலையிலேயே திரிகிறது. சுற்றுலா பயணிகள் வீசும் பழங்களை, உணவுப்பொருட்களை சாப்பிட்டு .உயிர் வாழ்கிறது. அதுபோல இந்த யானைக்குட்டியை பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது வனத்துறையினரின் கடமை. ஒன்று இதன் தாய் இருக்கும் இடத்தை அறிந்து அங்கே கொண்டு போய் விட்டிருக்கலாம். அல்லது வனத்துறை முகாமிலேயே வைத்து பராமரித்து கும்கியாக மாற்றியிருக்கலாம்.இந்த இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் இதற்கு எப்போது இருந்தாலும் ஆபத்துதான்!’ எனக் கவலை தெரிவிக்கின்றனர் வனஉயிரின ஆர்வலர்கள்.

இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, ‘இதை முகாமிலேயே வைத்துக் கொள்ளத்தான் முயற்சி செய்தோம். இது அரிச்சாட்டியம் தாங்கவில்லை. பாகன்களுக்கே கட்டுப்பட மறுக்கிறது. கிட்டப்போனால் மண்ணை வாரி இரைப்பதும், தும்பிக்கையில் கிடைத்ததை தூக்கி எறிவதுமாகவே இருக்கிறது. தவிர இப்போது அடைக்கலமாகியுள்ள சாடிவயல் முகாம் பாதுகாப்பானதாகவும் இல்லை. முகாமை சுற்றி ஏராளமான காட்டுயானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதில் மதம் பிடித்த ஆண் யானைகளும் உள்ளது. ஏற்கனவே அப்படித்தான் ஒரு ஆண் ஒற்றையானை கும்கி சுஜய்யை இரவில் தாக்கி ஒரு கொம்பை உடைத்தது. அதை அன்று காப்பாற்றவே நாங்கள் பாடாய் பட்டுவிட்டோம். இன்னொரு கும்கி பாரிக்கு மதம் பிடித்த சூழ்நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் இதையும் வைத்திருந்து காட்டு யானைகளால் நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டால் சிக்கலாகி விடும். எனவேதான் இதை காட்டுக்குள் விடுவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எடுக்க வேண்டியதாயிற்று!’ என்றனர்.

இருந்தாலும் இப்போது காட்டுக்குள் விடப்பட்ட யானை குடியிருப்புகள் உள்ள சாலைக்கு வந்து நின்று விட்டது. அது எந்த நேரத்தில் நகரப்பகுதிக்கு நகருமோ தெரியாது. அதை எப்படி காட்டுக்குள் விரட்டி பாதுகாப்பது என்று புரிபடாமல் தவித்துக் கொண்டிருக்கிறது வனத்துறை.

இன்றும் ஊருக்குள் புகுந்த யானை: வனத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்படுமா?

நேற்று இரவு காட்டுக்குள் விரட்டப்பட்ட குட்டியானை இன்றும் காலை காட்டை கடந்து மீண்டும் மலையடிவாரத்தில் உள்ள அன்சூர் மற்றும் வெள்ளியங்காடு கிராமங்களுக்குள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளது. வழக்கம் போல் வீடுகளை தேடி செல்லும் யானை அங்கிருக்கும் அனைவரையும் விரட்டியது. மேலும் சாலையில் நின்று கொண்டு வழியில் செல்வோரை அச்சுறுத்தி வருகிறது.

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக ஊருக்குள் காட்டு யானை சுற்றி வருவதால் வெளியில் நடமாடவே இயலவில்லை. எங்கேயோ இருந்த யானையை எங்களது கிராமங்களை ஒட்டிய வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு வந்து விட்டதாலும், அந்த யானை அடர்ந்த காட்டுக்குள் சென்றதா என கண்காணிக்காமல் விட்டதாலும், தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர் இந்த ஊர் மக்கள்.

கிராமமக்களின் புகாரை தொடர்ந்து தற்போது சிறப்பு யானைதடுப்பு காவலர்கள் 20 பேர் வரவழைக்கப்பட்டு இரண்டு வனத்துறை வாகனங்கள் மற்றும் பட்டாசுகளின் உதவியோடு யானையை காட்டுக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால் வனத்துறையினர் விரட்டும் போது சாலைகளில் ஓடி செல்லும் யானை ஊருக்கு அருகே உள்ள புதர் மறைவிலேயே பதுங்கி உள்ளதால் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு வேளை இது திரும்ப திரும்ப ஊருக்குள்ளேயே வந்தால் அதை பிடித்து மறுபடியும் சாடிவயல் முகாமிற்கு கொண்டு போய் வளர்ப்பு யானையாக பழக்கப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் வனத்துறையினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x